Wednesday, August 05, 2020

கிழம்

கிழம்

ஆச்சு, இந்த புரட்டாசி வந்தா எனக்கு வயது, விபவவில் இருந்து விபவ அறுபது, சுக்ல பிரமோதூத..சார்வரி, சரி கொழப்பவில்லை. புரட்டாசி வந்தா 91.  இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருப்பது சென்னை என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையில் எங்கு என்று மட்டும் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.  இரண்டு அல்லது மூன்று மதத்திற்கு ஒருமுறை என்னை பார்சல் செய்துகொள்வார்கள் என் இரு பிள்ளைகளும்.  கடைசியாக ஏதோ கோட்டூர்புரம் என்று சில வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது.  மற்றபடி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

மறதி வேற.  ஒரு சில வருடங்களாகவே இந்த மறதி வந்து படுத்தி எடுக்கிறது.  எனக்கு எவ்வளவு பிள்ளைகள் என்று குழப்பங்கள்.  அதனால்தான் இப்போ கொஞ்சம் நினைவு இருக்கும்போது எழுதலாம் என்று  உட்கார்ந்தேன்.  எனக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண்.  பெண்ணை கலியாணம் செய்து கொடுத்து பரோடாவில் செட்டில் ஆகிவிட்டாள். அவளுக்கும் இப்போ எழுவது வயது ஆகப்போகிறது.  பிள்ளை பேரன் என்று அவள் குடும்பத்தை சமாளிப்பதிலேயே அவளுக்கு போய்விடுகிறது.  மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மெட்ராசுக்கு  வருவாள்.  வந்த அம்மா அம்மா என்று மாய்ந்து போவாள்.  என்னோட வந்துடு, பரோடாவில் அணைத்து வசதியும் இருக்கு என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்வாள்.  ஒரு மாதம் கழித்து கிளம்பும் பொழுது பொங்கல் சேர அழைத்துக்கொண்டு போகிறேன். இப்போ உன்னால குளிர் தாங்கமுடியாது என்று கிளம்புவாள். எனக்கு இங்க தான் சாஸ்வதம்.  இன்னும் எத்தனை நாளோ என்று எண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்.

மறப்பதற்கு முன் என்னுடைய பழைய கதையை சொல்லி விடுகிறேன்.  என்னுடைய பெயர் கோகிலாம்பாள்.  கோகிலா பாட்டி என்று தான் எல்லோருக்கும் தெரியும்.  பூர்விகம் திருமணஞ்சேரி.  மாயவரம் பக்கம்.  பெரிய அக்ரஹாரம். அநேகமா எங்கள் தெருவில் எல்லோரும் ஏதாவது ஒரு உறவாகத்தான் இருக்கும்.  காவிரி கரை. எங்கு பார்த்தாலும் வயல்வெளியும், தென்னைதோப்புகளாக இருக்கும்.  மூன்று கட்டு வீடு.  இப்போ யாருக்கு தெரியும் மூன்று கட்டு  வீடெல்லாம். எங்கள் வீட்டிற்கு பின்னால் தோட்டத்தின் வழியாக சென்றால் காவிரி கரையை அடைந்து விடலாம்.  சிறுவயது முதல் தினமும் காவிரியில் குளித்துவிட்டு எங்கள் ஊர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம்.  சுவாமி பெயர் கல்யாணசுந்தரேஸ்வரர், அம்பாள் பெயர் கோகிலாம்பாள். கோவிலில் ஆள் அரவம் இருக்காது. இப்போலாம் நிறைய பேர் கூட்டமாக வருகிறார்கள் என்று கேள்வி.  எங்கள் ஊர் கோவிலுக்கு சென்று வந்தால் கல்யாணம் சீக்கிரம் நடக்கும் என்று ஐதீகம்.  எனக்கும் பதினைந்து பதினாறு வயதில் விமரிசையாக கல்யாணம் செய்து வைத்தார்கள்.  என் அப்பா ஊரில் கொஞ்சம் சொத்து பத்து இருப்பவர் தான்.   வீருசாமி பிள்ளை நாதஸ்வரம், அரியக்குடி கச்சேரி, வலங்கைமான் வேட்டு என்று நான்கு நாட்கள் கல்யாணம். ஊரே ப்ரமாதப்பட்டது.

அவருக்கு பெயர் சபேசன். திருவிடைமருதூரில் இருந்து பெரிய கூட்டமே வந்து இருந்தது.  கலியாணம் முடிந்த கையோடு இரண்டு பிள்ளையும், ஒரு பெண்ணும் பெற்றாகிவிட்டது. இரண்டு பிறந்தவுடன் இறந்துவிட்டது.  பத்து வருடம் கூட முடியவில்லை, அவருக்கு வயிற்றுவலி எடுத்தது, ஒரு வாரம் அவதிப்பட்டது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு கை விரித்துவிட்டார்கள்.  ஒரு வாரத்தில் உயிர் பிரிந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நான் தனி தான். ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்து வைக்கும் எங்கள் ஊர் சாமிக்கு என்னை இப்படி பார்ப்பதில்தான் ஆசையோ என்னவோ.  ஏதோ சொத்து தகராறு, பங்காளிகள் சண்டை எல்லாம் முடிந்து எனக்கு கொஞ்சம் சொத்து கைக்கு வந்தது. இதற்குள் எங்கள் ஊரில் பலர் மெட்ராஸுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.  நானும் ஒரு சில வருடம் ஊரில் போராடிவிட்டு, பிள்ளைகள் மேற்படிப்பிற்கு மெட்ராஸ் வந்தேன்.  இந்த மெட்ராஸ்ல தன்னந்தனியா அலையாத இடம் இல்லை.  சில வருடங்களில் ஊரில் இருந்த நில குத்தகைக்காரர்களிடம் இருந்து வரும் கொஞ்ச நஞ்ச வருமானமும் நின்று விட்டது.  கடைசியில் நிலமே இல்லை என்று ஆகிவிட்டது.  இதற்குள் எங்கள் ஊரில் தெரிந்தவர்கள் யாருமே இல்லாததால் நிலங்களை முற்றிலும் இழந்துவிட்டோம். பிறகு கஷ்ட ஜீவனம்தான். காலையிலும், மாலையிலும் 4,5 வீடுகளில் சமையல் வேலை. கொஞ்சம் நன்றாக பாடுவேன்.  சனி, ஞாயிறு முழுதும் குழந்தைகளுக்கு பாட்டு கிளாஸ், கூடை பை பின்னி கொஞ்சம் வியாபாரம் என்று எப்படியோ பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிட்டேன்.

மூத்தவன் கல்யாணசுந்தரம், எங்கள் ஊர் ஸ்வாமியின் பெயர். அடுத்து பிச்சை என்கிற கிருஷ்ணமூர்த்தி.
இவர்கள்தான் என்னை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டு கொண்டு இருக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னால் கூட நான் கோவில், ப்ரவசனம், கச்சேரி என்று போய் விடுவேன்.  இப்பொழுது அதுவும் முடிவதில்லை.  எங்க, இப்போ தெருவில் கால வெச்சாலே வண்டி சத்தம்.. அப்பப்பா. எதற்காக இந்த அவசரம்.  முன்னெல்லாம் தியாகராய நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் என்று நடந்தும் பஸ்ஸிலும் போய் இருக்கிறேன்.  இப்போல்லாம் தெருவில் எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  தெருவை எப்படி கடப்பது என்று புரிவதில்லை. உலகத்தின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.  இந்த பரபரப்பு, கூட்டம், கோபம் இதெல்லாம் எனக்கு புரிவதில்லை.  ஒரு விநாடிகூட ஒரு இடத்தில நிற்கமுடிவதில்லை.  தெருவில் காலை வைத்தால், பின்னாலயே ஒரு வண்டி வரது, கூட்டம் கூடி விடுகிறது.

என் பேரன்களும், பேத்திகளும் அமெரிக்கா, கனடா என்று இருப்பதால், என் இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி அங்கு போகவேண்டி இருக்கிறது.  என்னை எங்க அழைத்துபோவது. நான்தான் இவர்களுக்கு ஒரு கால்கட்டு.  இந்த கிழத்த வெச்சுண்டு எங்கயும் நிம்மதியா போகமுடியலியே, இது போன்ற சம்பாஷணைகள் அடிக்கடி காதில் விழுவதுண்டு.

வருஷாவருஷம் இவர்கள் அமெரிக்கா போகவேண்டி இருக்கிறது.  இப்போகூட ஏதோ சீனியர் citizen ஹோம் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  எனக்கு இல்லை, அவர்களுக்கு.  அங்கு போனால் பல வேலைகள் மிச்சம், சமைக்க தேவை இல்லயாம்.  என்னை என்ன செய்வது என்று பெரிய யோசனையாய் இருக்கிறது.  நான் என்ன செய்யமுடியும். சுவாமி எப்போ கூப்படறாரோ. எனக்கென்ன தனிமை புதுசா. அறுபது வருடமாக ஒண்டி கட்டைதான்.  அவர் முகம் கூட மறந்து பல வருடமாகிவிட்டது.  ஒரு போட்டோ கூட இல்லை.

இன்னும் எவ்வளவு நாள் இந்த ஜீவனம். எனக்கு திருமணஞ்சேரியில் போய் கண்ணைமூட ஆசைதான். என்ன செய்ய. நான் இப்படியே மாடிப்படி அருகே உட்கார்ந்துகொண்டு கொண்டு வருவோரையும்  போவோரையும்  ஏதாவது கேள்வி கேட்டுண்டு இருப்பேன். எனக்கு வேற வேலை இல்லை. கண்ணை மூடினால் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது.  இதுல மறதி வேற. ஏதோ என் மனதில் இருப்பதை எழுதலாம் என்று உட்கார்ந்தேன்.  உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் பழைய கதை எல்லாம் இப்போ எதற்கு. நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில், என் கதையை படிக்க ஏது நேரம். படித்துதான் என்ன ஆகப்போகிறது.


ரங்கா


No comments: