Monday, August 24, 2020

மஹாகலைஞன்

இரவு எட்டு மணிக்குத்தான் தொடங்கியது அன்றைய கச்சேரி. அப்போல்லாம் விளம்பரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் கச்சேரியை ஆரம்பிப்பது ரொம்ப அபூர்வம். பாடகர் டிரைனோ பஸ்ஸோ பிடித்து வரவேண்டும், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வந்து வண்டி கட்டிக்கொண்டு வருவர்தற்குள் ஓரிரு மணி தாமதமாகிவிடும். அதனால் என்ன, பாடகர் மஹாகலைஞனாக இருந்ததால் மக்கள் வெள்ளம் திருவானைக்கோயில் மண்டபத்தில், எள் போட்டால் எண்ணெயாகிவிடும், அவ்வளவு கூட்டம். பாடகருக்கு பெரிய ஜமா. லால்குடி ஜெயராமன் பிடில், முருகபூபதி மிருதங்கம், மாயவரம் சோமு கஞ்சிரா இப்படி பெரிய செட், மேடையிலும் உட்கார இடம் இல்லை. எல்லோரும் வந்து சேர்ந்து அம்சை அடங்கி சுருதி சேர்ப்பதற்குள் எட்டறை மணி இருக்கும். தேவமனோஹரி வர்ணத்தில் தொடங்கி, பிறகு தீக்ஷிதர், நடநாராயணியில் பிள்ளையார் கிருதி. இதில் நிரவல் ஸ்வரம் என்று கச்சேரி களை கட்ட தொடங்கியது. பிறகு அடுத்து அடுத்து இடைவிடாமல் ஒவ்வொரு ராக தேவதைகள் வந்து சஞ்சாரம் செய்தார்கள். சில தெரிந்த கிருதிகள், சில அபூர்வ கிருதிகள். ஆந்தோளிகா, குர்ஜரி, சல நாட்டை, தோடி, காம்போதி எப்படித்தான் இடைவெளி இல்லாமல் இப்படி பாட முடிகிறது. இரவு பன்னிரண்டு இருக்கும், இன்னும் கச்சேரி வேகம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. பக்கவாத்தியகாரர்கள் ஒன்றும் சாதாரணப்பட்டவர்கள் இல்லை. பாடகர் போடும் கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுத்துக்கொண்டு கூடவே அணை கட்டிக்கொண்டு சென்றார்கள். ராணுவ விமான சாகசங்கள் போல திடீரென்று மேலிருந்து கீழ், பிறகு கீழிருந்து மேல். எப்படித்தான் குரலை இப்படி பழக்கமுடியுமோ. எத்தனை கணக்கு, அரை எடுப்பு, முக்கால் எடுப்பு, எல்லா வித்தையும் செய்தாயிற்று. ஐந்து ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் செய்தாயிற்று. ஸ்வர ப்ரஸ்தாரத்தில் எத்தனை வகை. சர்வலகு ஸ்வரங்கள், பின்னல் ஸ்வரங்கள், அடுக்கு ஸ்வரங்கள் எட்டு எட்டாக, நாலு நாலாக வந்து கொண்டே இருந்தது. கூட்டத்தில் ஒருவராவது இடத்தை விட்டு அசையவேண்டுமே, உம். பிடித்து வைத்த பிள்ளையார் சிலை போல அத்தனை கூட்டமும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தது. இரவு நேரம் ஆக ஆக கூட்டம் இன்னும் வளர்ந்துகொண்டே இருந்தது. சில துண்டு சீட்டுக்கள் மேடைக்கு வந்தது அதிலிருந்து சில, பிறகு ஒரு விருத்தம் இதிலும் சஹானா, பைரவி, கல்யாணி என்று பத்து பதினைந்து ராகங்கள். நடுநடுவே சபாஷ், பலே என்று லால்குடிக்கு உற்சாகம், கஞ்சிரா மிருதங்கம் என்று மாறி மாறி பாராட்டிக்கொண்டு இருந்தார் பாடகர். விருத்தத்தின் நடுவே பாடகர் நிஷ்டைக்கு சென்று, கண்ணை சிறிது நேரம் மூடி மௌனமானார், கண்ணில் தாரை தரையாக ஜலம். அதன் பிறகு திரும்பவும் ஓரிரு துக்கடாக்கள். ஒரு வழியாக கச்சேரி முடியும்போது ஒன்னு ஒன்றரை இருக்கும். இத்தனையும் செய்து காட்டிய அந்த மகா கலைஞன் தான் மதுரை சோமசுந்தரம். இப்படி பாடுவதற்கு இரண்டு மூன்று ஜென்மாக்கள் பழகவேண்டுமே. சரஸ்வதியின் மடியில் குழந்தையாக விளையாடி கற்றுக்கொண்டாரோ இந்த வித்தைகளை எல்லாம். இத்தனையும் ஒரு குருவிடம் பயிற்சி பெற முடியுமா? மதுரை சோமு, ஒரு உன்னத கலைஞர். கர்நாடக சங்கீதத்தின் எட்டமுடியாத உச்சத்தை தொட்டவர். இன்று பல வித்துவான்கள் ஒன்றரை மணி நேர கச்சேரிக்கு ஒன்பது முறை தண்ணீர் குடித்து, சுருதி பலமுறை சேர்த்து, ஆலாபனை என்ற பெயரில் நிகாசு வேலை செய்பவர்கள் தான் அதிகம். இவர்களுக்கு நடுவே மதுரை சோமு மாறுபட்டவர். ஒவ்வொரு ராகத்திற்கும் அடித்தளம் போட்டு, பெரிய மாளிகையே கட்டிவிடுவார். ஒவ்வொரு ராகமும் இவரை பாடவைப்பதற்கு போட்டி போடுவது போல முன்னுக்கு முன் வந்து நிற்கும். விருதுகளுக்கோ, பாராட்டுகளுக்காக பாடுபவர் இல்லை. இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு கச்சேரியிலும் தனக்கும் அந்த பரம்பொருளுக்கு இடையே இருக்கும் தொடர்பை வலுப்படுத்தி கொண்டே இருப்பவர். நீங்கள், மயிலாப்பூர் வாசிகள், ஏற்படுத்திய சிறிய சங்கீத வட்டத்தின் இலக்கணத்தில் இல்லை என்பதால் இவருக்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்க மனம் வரவில்லை. இதனால் இவருக்கு என்ன நஷ்டமா, சங்கீதம் தனக்கும் கடவுளுக்கும் நடக்கும் உரையாடல் என்று நினைப்பவருக்கு. ஜனரஞ்சகத்தின் தலைவனாக திகழ்ந்தார். நீங்கள் இதுவரை இந்த அதிசயத்தை கேட்டதில்லை என்றால் இவருடைய "தாயே யசோதா" வை கேட்டுப்பாருங்கள். யூடியூபில் இருக்கிறது. நான் சொல்வது புரியும். இசை உலகில் என்றும் ஒரு மகா கலைஞன் என்றால் எனக்கு மதுரை சோமு அவர்கள்தான். ரங்கா

No comments: