Friday, August 21, 2020

பெயர்

உங்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறதா அல்லது விரைவில் பிறக்கப்போகிறதா. அப்போ உங்களுடன் ஒரு சில வார்த்தைகள். குழந்தைக்கு பெயர் வைப்பது கத்தியில் நடக்கும் வித்தை. எப்படி பெயர் வைத்தாலும் யாருக்காவது அதில் ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் இருக்கும். தன் சொந்த பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள் இப்படி எல்லோரையும் ஒரே நேர் கோட்டில் நிறுத்துவது என்ன சாதாரண விஷயமா. இதை தவிர வீட்டு வேலைக்காரியில் இருந்து, இஸ்திரிகாரன் வரை எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லி மாளாது. குழந்தையின் பெற்றோர்களுக்கு இதற்குள் பாதி முடி கொட்டிவிடும். பொதுவாக இப்பொழுது பெயர் என்றவுடன் முதல் வேலையாக கூகிளில் சென்று "baby names" என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள். கூகிள் பெயர்கள் பெரிதும் வட இந்திய பெயர்களாகத்தான் இருக்கிறது. நம்மில் பலருக்கு இந்த பெயர்கள் வாயில் நுழைவதில்லை. தமிழ் தமிழ் என்று கதைக்கும் பலர் கூட தங்கள் இதுபோன்ற பெயர்களை வைத்து கஷ்டப்படுகிறார்கள். கிராமங்களில் கூட இந்த கூகிள் பெயர்கள் பிரபலமாகிவிட்டன. அப்பா தாத்தா பெயருடன் ஒப்பிட்டால் இந்த குழந்தை ஏதோ வேற்று கிரகவாசியை போல இருக்கிறது. அதோடு இல்லை. இந்த கூகிள் பெயர்கள் பொதுவாக சமஸ்க்ரிதத்தில் இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. சமஸ்க்ரித பெயர்களில் ஒன்றும் தவறில்லை, ஆனால் அதற்கு அர்த்தம் தெரிந்து குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள். வட இந்தியாவில் பெயரின் கடைசி பகுதியை வெட்டிவிடுவார்கள். கிருஷ்ணன் க்ரிஷ் என்றும், கணபதியை கண்பத் என்று. அர்த்தம் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு பெயர் வைக்கவும். நம்மிடையே பெயர்கள் ஏதாவது ஒரு கடவுளின் பெயராக வைப்பது வழக்கம். சுவாமி பெயர் வைப்பதால் வீட்டில் பகவன் நாமம் வீட்டில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டு இருக்கும் என்று நம்பிக்கை. இப்பொழுது இது முற்றிலும் வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. சமீபமாக நான் இது போன்ற சுவாமி பெயர்களை அதிகம் காண்பதில்லை. உதாரணத்திற்கு சாத்விக், லலித் போன்ற பெயர்கள் ஒரு மனிதனின் தன்மையை (character) குறிக்கின்றது. இப்படி வைத்தால் என்ன தவறு என்று கேட்பீர்கள். தவறு ஒன்றும் இல்லை, ஆனால் இந்த சமுதாய மாறுதல்களுக்கு நாமும் ஒரு காரணமாகிறோம். இன்னும் சில வருடங்களில் கடவுள் பெயர் கொண்டவர்களே இருக்கமாட்டார்கள். இதுவும் ஒரு விதத்தில் நம்முடைய ஹிந்து மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். நம்முடைய பக்தி இலக்கியங்களில் பெயர்களை தேடுங்கள், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாமம், ஸ்கந்த புராணம் என்று பல இருக்கிறது. இவற்றிலும் பகவன் நாமமாக தேர்ந்தெடுங்கள். இதில் சரியானபடி கிடைக்கவில்லை என்றால் உங்கள் இஷ்ட தெய்வங்களின் கோயில் சுவாமி பெயர்களை வைக்கலாம். உதாரணத்திற்கு சிதம்பரம் அல்லது ராஜகோபாலன் என்ற பெயர்களால் குழந்தைகளுக்கு அந்த தெய்வங்களுடன் ஒரு நெருக்கமும் அடையாளமும் கிடக்கிறது. சிதம்பரம் அல்லது நடராஜன் என்று பெயர் உள்ளவர்கள் எப்பொழுதும் சிதம்பரம் கோவிலுடன் ஒரு வித பக்தியும் உடைமையும் (sense of belonging) சிறு வயது முதல் குழந்தைகளுக்கு வருகிறது. முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கும் நமக்கு பெயர்களுக்கா குறைவு. உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைக்கிறீர்கள், நான் குறுக்கே நிற்கவில்லை. இருப்பினும் என்னுடைய எண்ணங்களை பகிர்வது முக்கியம் என்று நினைக்கிறேன். ரங்கா

No comments: