Wednesday, August 19, 2020

உடன்பிறப்பு

ஒரு வாரமாக உடன்பிறப்பு என்று பலபேர் இங்கு அனத்திகொண்டு இருக்கிறார்கள். உடன்பிறப்பு என்றால் எனக்கு என்ன நினைவிற்கு வருகிறது என்று சொல்லிவிடுகிறேன். சிறு வயதுமுதல் எத்தனை கூட்டங்கள், மயிலை மாங்கொல்லை, மாம்பலம் பஸ் ஸ்டாண்ட், திருச்சி ரயில்வே கிரௌண்ட்ஸ், மதுரை தமுக்கம் மைதானம் இப்படி எத்தனை இடங்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், மேடையில் வீற்றிருக்கும் ஓவ்வொரு பெயரையும் எந்தவித துண்டு சீட்டும் இல்லாமல் நிதானமாக சொல்லி, வாஜ்பாய், அத்வானி, விபிசிங், ஹெக்டே பிறகு கடைசியில் என் அன்பு உடன்பிறப்பே என்று முடிக்கும்பொழுது இருக்குமே ஆரவாரம். ஆமாம், உங்களுக்கு இருவது வயதிற்கு மேல் நூறு வயதுக்குள் இருந்தால் உங்களுக்கு இந்த உடன்பிறப்பே என்ற குரல் யாருடையது என்று தெரிந்திருக்கும். கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த குரல் ஒலிக்காத நாளில்லை. கிட்டத்தட்ட என்பதாண்டுகளாக ஒலித்த இந்த குரல், உடன்பிறப்பே என்ற வார்த்தையை தனதாக்கி கொண்டு ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்திலும் தலைவனாகவோ அல்லது பகைவனாகவோ வாழ்ந்து இருக்கிறார். இன்று தமிழகத்தில் உடன்பிறப்பே என்ற வார்த்தைக்கு அன்று இருந்த வீரியம் இல்லை, கவர்ச்சி இல்லை. இதனால் தான் கலைஞரின் சொந்தங்கள் தமிழர்களின் நெஞ்சத்தில் இடம்பிடிக்க தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Emotional Connect என்று சொல்வார்களே, அது கலைஞரின் குரலுக்கு சொந்தமானது. ஏழையோ, பணக்காரனோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ கலைஞரின் பேச்சாற்றலில் கட்டப்படாதவர்களே கிடையாது. இந்த குரலின் வசீகரம் இன்று இங்கு எவருக்கும் கிடையாது. இன்று எல்லோரும் பெரியாரை என்கிற ஈ வே ரா வின் நாத்திகத்தை பற்றி பரப்புரை செய்பவர்களுக்கு தெரிவதில்லை, கலைஞரால் மட்டுமே இன்று தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் அதிகம் இருக்கிறது. நல்ல வேளையாக இது கலைஞருடன் முடிந்துவிட்டது, ஏன் என்றால் கலைஞர் அளவிற்கு நம்மை சிந்திக்க வைக்கும் தலைவர்கள் இங்கு இல்லை. நாத்திகவாதத்தையும் நயமாக பேசி ஓரளவிற்கு நம்ப வைத்தவர் கலைஞர். கலைஞரால் உருவாக்கப்பட்ட பிம்பம்தான் பெரியார், தவிர பெரியாருக்கு என்று ஒரு தனி charisma கிடையாது. இன்று அந்த பிம்பத்தை யாராலும் காட்சிப்படுத்த முடியவில்லை. அதனால் தான் இன்று அரைவேக்காட்டு நாத்திகம் தமிழகத்தில் நொருங்கிக்கொண்டு இருக்கிறது. கலைஞரால் வைக்கப்பட்ட பெரியார் சிலைகள் இன்று வெறும் மண் பொம்மைகள்தான். அதற்கு உயிரூட்ட கலைஞர் இல்லை. கலைஞருக்கு எதிலும் ஒரு ரசிப்புத்தன்மை இருந்தது. இலக்கியத்தை இலக்கிய தரத்திற்காக படிக்கக்கூடியவர். இதனால் தான் இவரின் கொள்கை உரைகள் ரசிக்கும்படியாக இருந்தது. இன்று உடன்பிறப்புகள் பக்தி இலக்கியத்தில் விரசத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது கூட கலைஞர் மயிலை மாங்கொல்லையில் உடன்பிறப்பே என்று அழைப்பது எனக்கு கேட்கிறது. ரங்கா

No comments: