Monday, August 10, 2020

ராஜம் ப்ரொவிஷன்ஸ்

 ராஜம் ப்ரொவிஷன்ஸ் 


உங்களுக்கு என்னுடைய முதல் பிசினஸ் அனுபவத்தை பற்றி சொல்லியே தீரவேண்டும்.  இதை சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு விருத்தாசலம் ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்லவேண்டும். ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் என்றவுடன் பெரிதாக நினைத்து விடாதீர்கள். கடையின் மொத்த அளவு நாலுக்கு மூணுதான் இருக்கும். இந்த ராஜம் என்னுடைய பாட்டிதான். என்னுடைய மாமா ஒருவருக்கு சரியானபடி வேலை கிடைக்கவில்லை.  ஊரில் சில விடலை படங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதால் பாட்டிக்கு அதிகம் கவலை. உத்யோகம் புருஷ லக்ஷணம் என்பதால் இப்படி ஒரு ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் ஆரம்பித்து இருந்தார் என் மாமா. யாரவது பையன் என்ன பண்ணுகிறான் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு தோதாக இருந்தது. 


இதையும் மீறி சிலர், கா காசு என்றாலும் கவன்மெண்ட் காசாகுமா? இந்த கடையெல்லாம் நமக்கு எதுக்கு என்று யாராவது மாமி வீட்டிற்கு வந்து வெறுப்பேற்றுவார்கள். இதை எல்லாம் மீறித்தான் இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் நடத்த வேண்டி இருந்தது.  


இந்த கடையின் மூலதனம் ஏழெட்டு பெரிய பாட்டில்கள், இதில் பப்புறமுட்டாய், இலந்தவடை, மல்லாட்டை என்று சொல்லப்படும் வேர்க்கடலை, இன்னும் சில பிஸ்கட் வகைகள் இருக்கும். அப்புறம் கொஞ்சம் சணல் கயிற்றில் மேலிருந்து நான்கைந்து ஊறுகாய் அட்டைகள், கொழா பப்படம், கோபால் பல்பொடி, மலபார், காஜா பீடி மற்றும் ஒரு ஐஸ் போட்டியில் நாலு கலர் சோடா.  இவைதான் கடையின் மொத்த ப்ரொவிஷன்ஸ். Turnover என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.


பாட்டி வீட்டின் முன் திண்ணையில் ஒரு பக்கம் மரப்பலகைகளை தடுத்து கடையாக்கி இருந்தார்கள்.  கடையின் பின் வழியே வந்தால் வீட்டு ஹாலுக்குள் வந்து விடலாம்.  இந்த கடைதான் என்னுடைய முதல் பிசினஸ் அனுபவம்.  கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போகும்பொழுது, பல முறை இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் காஷியராக இருந்திருக்கிறேன்.  கடையின் முக்கியமான நேரங்கள் பக்கத்தில் இருந்த எலிமெண்டரி ஸ்கூல் ஆரம்பத்திலும் முடிவிலும் தான்.  ஸ்கூல் போகும் பையன்கள் போகிற வழியில் இலந்தவடை வாங்கி செல்வார்கள்.  மற்றபடி மதியம் கடையின் நிரந்தர கஸ்டமர்ஸ் ஊறுகாய் பாக்கெட், பப்படம் வாங்க வருவார்கள்.  ஒரு சில 'குடிமகன்கள்' பீடி, சிகரெட்டு வாங்குவார்கள்.  அநேகமாக இவர்களுடன் ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.   கடை திறந்து இருக்கும்பொழுது எப்பவும் ஒரு ஆள் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்து மறந்துபோனால் குரங்கு வந்து வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு போய்விடும்.  மத்தபடி மாமாவின் நண்பர்கள் சிலர் வந்து சினிமா, அரசியல் என்று பேசிவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் போவார்கள்.


இந்த கடையில் எனக்கு பிடித்த விஷயம் அந்த காளி மார்க் சோடா பெட்டிதான்.  தினமும் கடை திறப்பதற்கு முன் கடைத்தெருவில் போய் ஐஸ் வாங்கிவரவேண்டும்.  தெர்மக்கோல் பாக்ஸில் அதை போட்டு, சோடாக்கள்  அடுக்கி வைக்கப்படும்.  இதில் மதியம் வெய்யில் தாக்கத்தால் அநேக நாட்கள் நானே குடித்துவிடுவேன். 


ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பிசினஸ் ஓரளவிற்கு சூடு பிடித்திருக்கும் வேலையில் தான் வந்தது அதற்கு ஒரு சோதனை.  எங்கள் கடைக்கு எதிர் சாரியில் கிட்டத்தட்ட இதே பிசினஸ் மாடலில் கிட்டு ஐயரின் கடை.  இந்த கடை எங்கள் கடையை விட முதலீடு அதிகம்.  வழக்கமான ஊறுகாய், இலந்தவடையை தவிர நெய்வேலியில் இருந்து கம்பெனி மிட்டாய்கள் இறக்குமதி செய்யப்பட்டது.  நியூட்ரின் சாக்லேட் அறிமுகப்படுத்தினார்கள்.  இதனால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.  மேலும் இந்த காம்பெடிட்டர் கடை ஸ்கூல் பையன்களை கவரும் வண்ணம் வண்ண வண்ண பப்படம், கேம்பா கோலா என்று பல புது யுக்திகளை செயல்படுத்தினார்.  அந்த கடையிலும் நான் சில நேரங்களில் கேஷில் உட்கார்ந்து இருக்கிறேன்.  ராஜம் ப்ரொவிஷனுக்கு வரும் வாடிக்கை கஸ்டமர் அந்த கடைக்கு போகும்பொழுது ஒரு குற்ற உணர்ச்சியுடன் எங்களை பார்த்துக்கொண்டே செல்வார்கள்.


கொஞ்ச நாட்களில் மாமாவிற்கு அரசாங்க வேலை கிடைத்து மெட்ராஸ் போகவேண்டியதால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் மூடப்பட்டது.  பிறகு சில வருடங்கள் கழித்து இன்னொரு மாமாவிற்கு வேலை கிடைக்காததால் கடை மீண்டும் திறக்கப்பட்டது.  அப்புறம் ரொம்ப நாட்கள் இதை தொடர முடியவில்லை.  


இன்று எவ்வளவோ கிளைண்ட்ஸ் மீட்டிங், பிசினஸ் என்று இருந்தாலும், அந்த புளிப்பு மிட்டாயும், ஊறுகாயும் பாட்டிலில் இருந்து எடுத்துக்கொடுத்து சில்லறை கல்லாவில் போடும் சந்தோஷத்திற்கு ஈடு உண்டோ.


ரங்கா 


No comments: