Sunday, September 06, 2020

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் இங்கு நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, அவரிடம் கேட்டார்களாம், உங்கள் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று, அதற்கு அவர் தன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுங்கள் என்று சொன்னாராம். நிற்க, நாடெங்கும் ஆசிரியர் தினம் விமர்சையாக கொண்டாடப்படும் வேளையில் நான் ஓரிரு வார்த்தைகளை சொல்லிக்கொள்கிறேன். நான் கொஞ்சம் இது போன்ற கொண்டாட்டங்களில் ஒதுங்கித்தான் இருப்பேன். ஆசிரியர்களின் மேல் அப்படி என்ன உனக்கு என்று பாயாதீர்கள். காரணம் இருக்கிறது. எனக்கு பள்ளி அனுபவங்கள் ஒன்றும் பிரமாதமாக இருந்ததில்லை. ஒரு சில ஆசிரியர்களை தவிர பெரும்பாலும் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் எனக்கு கல்வி கற்கும் ஆசையே இல்லாமல் செய்தவர்கள் தான் அதிகம். இந்திய பள்ளிகளில் பொதுவாக மாணவர்களின் மதிப்பெண்களை வைத்துதான் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துவது வழக்கம். கொஞ்சம் சுமாராக இருந்தால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிடுகிறார்கள். மதிப்பெண்களை தாண்டி கற்றலின் (Learning) முக்கியத்துவத்தை அவர்கள் உணர்த்துவது கிடையாது. மாணவர்களுக்கு ஒரு பாடத்தின் (subject) மீது ஆர்வமும் ஈர்ப்பும் ஏற்படும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். ஆனால் இந்திய கல்வி முறை ஒவ்வொரு பாடத்திலும் எப்படி முழு மதிப்பெண்கள் எடுப்பது என்ற தந்திரத்தை மட்டும்தான் சொல்லிக்கொடுக்கின்றன. இந்த தந்திரம் பலருக்கு புலப்படுவதில்லை. மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு பாடத்திலும் ஒரு deeper interest ஏற்படுத்த பள்ளிகள் இடம் கொடுப்பதில்லை. முக்கால் மணி அவகாசத்தில் அவசரமாக பாடங்களை கொட்டிவிடுகிறார்கள். இது ஒரு சில Front Bench மாணவர்களை தவிர பல மாணவர்களுக்கு புரிவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் ஒவ்வொரு வருடமாக பின் தங்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு பத்து பன்னிரண்டு வகுப்புகளில் மாணவர்களை வடிகட்டி (filter) பள்ளிகள் நூறு சதவீதம் ரிசல்ட் காண்பிப்பதுதான் ஒவ்வொரு பள்ளியின் குறிக்கோளாக இருக்கிறது. இதில் வடிகட்டப்பட்ட மாணவர்கள் என்ன செய்கிறார்கள், நம்முடைய பள்ளியில் பத்து வருடங்கள் படித்த மாணவனின் எப்படி உலகை எதிர்கொள்ள போகிறான் என்ற கவலையே இல்லாமல் அடுத்த வருடத்தில் எப்படி 100% ரிசல்ட் வர முயற்சி செய்கிறார்கள். One Size Fits All என்ற முறையில் மாணவர்களின் தலையில் பளுவை வைத்துவிடுகிறார்கள். இதில் நீந்தி ஜெயிப்பது மிக கடினம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு, வெளியே டியூஷன் என்று பல வித்தைகளை செய்து வெற்றிபெற வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் எத்தனை மன உளைச்சல். ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களையும் கவனிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு வேலையாகத்தான் (Chore) பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பாடம் நடத்த தவறி விடுகிறார்கள். ஒரு ஆசிரியனின் வெற்றி, ஒவ்வொரு வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அணைத்துக்கொண்டு செல்வதில்தான் இருக்கிறது. இப்படி இல்லாமல் ஒரு சில மாணவர்களை மட்டுமே அதிகம் கவனித்து, பின் தங்கி இருக்கும் குழந்தைகளை அப்படியே விட்டு செல்வது ஒரு ஆசிரியருக்கு பெருமையாக இருக்க முடியாது. இதற்கு காரணம் முற்றிலும் ஆசிரியர்கள் என்று கூறவில்லை, நம்முடைய பாடத்திட்டமும் இப்படித்தான் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது வெறும் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் இல்லை, மற்ற துறைகளிலும் இதே கதைதான். சங்கீதம், விளையாட்டு என்று எல்லாவற்றிலும் இப்படித்தான். பாடத்திட்டங்களை front bench மாணவர்களை வைத்தே வடிவமைப்பதால் மற்றவர்களின் குரல் கேட்பதில்லை. பின் தங்கிய மாணவர்களுக்கு ஒரு வித inferiority complex நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களுக்கு அந்த வடுக்களில் இருந்து வெளியே வருவதற்கு பெரு முயற்சி எடுக்கவேண்டி உள்ளது. எனக்கு பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்களை நான் பெரிதும் unlearn செய்யவேண்டி இருந்தது. எனக்கு வாழ்க்கை மட்டுமே மிகப்பெரிய ஆசிரியனாக இருந்திருக்கிறது. நம்முடைய பாட திட்டமும், அதை சரியான பாதையில் வழிநடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தால் மட்டுமே, குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் ஒரு deeper interest ஏற்படும். ரங்கா

Monday, August 24, 2020

மஹாகலைஞன்

இரவு எட்டு மணிக்குத்தான் தொடங்கியது அன்றைய கச்சேரி. அப்போல்லாம் விளம்பரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் கச்சேரியை ஆரம்பிப்பது ரொம்ப அபூர்வம். பாடகர் டிரைனோ பஸ்ஸோ பிடித்து வரவேண்டும், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வந்து வண்டி கட்டிக்கொண்டு வருவர்தற்குள் ஓரிரு மணி தாமதமாகிவிடும். அதனால் என்ன, பாடகர் மஹாகலைஞனாக இருந்ததால் மக்கள் வெள்ளம் திருவானைக்கோயில் மண்டபத்தில், எள் போட்டால் எண்ணெயாகிவிடும், அவ்வளவு கூட்டம். பாடகருக்கு பெரிய ஜமா. லால்குடி ஜெயராமன் பிடில், முருகபூபதி மிருதங்கம், மாயவரம் சோமு கஞ்சிரா இப்படி பெரிய செட், மேடையிலும் உட்கார இடம் இல்லை. எல்லோரும் வந்து சேர்ந்து அம்சை அடங்கி சுருதி சேர்ப்பதற்குள் எட்டறை மணி இருக்கும். தேவமனோஹரி வர்ணத்தில் தொடங்கி, பிறகு தீக்ஷிதர், நடநாராயணியில் பிள்ளையார் கிருதி. இதில் நிரவல் ஸ்வரம் என்று கச்சேரி களை கட்ட தொடங்கியது. பிறகு அடுத்து அடுத்து இடைவிடாமல் ஒவ்வொரு ராக தேவதைகள் வந்து சஞ்சாரம் செய்தார்கள். சில தெரிந்த கிருதிகள், சில அபூர்வ கிருதிகள். ஆந்தோளிகா, குர்ஜரி, சல நாட்டை, தோடி, காம்போதி எப்படித்தான் இடைவெளி இல்லாமல் இப்படி பாட முடிகிறது. இரவு பன்னிரண்டு இருக்கும், இன்னும் கச்சேரி வேகம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. பக்கவாத்தியகாரர்கள் ஒன்றும் சாதாரணப்பட்டவர்கள் இல்லை. பாடகர் போடும் கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுத்துக்கொண்டு கூடவே அணை கட்டிக்கொண்டு சென்றார்கள். ராணுவ விமான சாகசங்கள் போல திடீரென்று மேலிருந்து கீழ், பிறகு கீழிருந்து மேல். எப்படித்தான் குரலை இப்படி பழக்கமுடியுமோ. எத்தனை கணக்கு, அரை எடுப்பு, முக்கால் எடுப்பு, எல்லா வித்தையும் செய்தாயிற்று. ஐந்து ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் செய்தாயிற்று. ஸ்வர ப்ரஸ்தாரத்தில் எத்தனை வகை. சர்வலகு ஸ்வரங்கள், பின்னல் ஸ்வரங்கள், அடுக்கு ஸ்வரங்கள் எட்டு எட்டாக, நாலு நாலாக வந்து கொண்டே இருந்தது. கூட்டத்தில் ஒருவராவது இடத்தை விட்டு அசையவேண்டுமே, உம். பிடித்து வைத்த பிள்ளையார் சிலை போல அத்தனை கூட்டமும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தது. இரவு நேரம் ஆக ஆக கூட்டம் இன்னும் வளர்ந்துகொண்டே இருந்தது. சில துண்டு சீட்டுக்கள் மேடைக்கு வந்தது அதிலிருந்து சில, பிறகு ஒரு விருத்தம் இதிலும் சஹானா, பைரவி, கல்யாணி என்று பத்து பதினைந்து ராகங்கள். நடுநடுவே சபாஷ், பலே என்று லால்குடிக்கு உற்சாகம், கஞ்சிரா மிருதங்கம் என்று மாறி மாறி பாராட்டிக்கொண்டு இருந்தார் பாடகர். விருத்தத்தின் நடுவே பாடகர் நிஷ்டைக்கு சென்று, கண்ணை சிறிது நேரம் மூடி மௌனமானார், கண்ணில் தாரை தரையாக ஜலம். அதன் பிறகு திரும்பவும் ஓரிரு துக்கடாக்கள். ஒரு வழியாக கச்சேரி முடியும்போது ஒன்னு ஒன்றரை இருக்கும். இத்தனையும் செய்து காட்டிய அந்த மகா கலைஞன் தான் மதுரை சோமசுந்தரம். இப்படி பாடுவதற்கு இரண்டு மூன்று ஜென்மாக்கள் பழகவேண்டுமே. சரஸ்வதியின் மடியில் குழந்தையாக விளையாடி கற்றுக்கொண்டாரோ இந்த வித்தைகளை எல்லாம். இத்தனையும் ஒரு குருவிடம் பயிற்சி பெற முடியுமா? மதுரை சோமு, ஒரு உன்னத கலைஞர். கர்நாடக சங்கீதத்தின் எட்டமுடியாத உச்சத்தை தொட்டவர். இன்று பல வித்துவான்கள் ஒன்றரை மணி நேர கச்சேரிக்கு ஒன்பது முறை தண்ணீர் குடித்து, சுருதி பலமுறை சேர்த்து, ஆலாபனை என்ற பெயரில் நிகாசு வேலை செய்பவர்கள் தான் அதிகம். இவர்களுக்கு நடுவே மதுரை சோமு மாறுபட்டவர். ஒவ்வொரு ராகத்திற்கும் அடித்தளம் போட்டு, பெரிய மாளிகையே கட்டிவிடுவார். ஒவ்வொரு ராகமும் இவரை பாடவைப்பதற்கு போட்டி போடுவது போல முன்னுக்கு முன் வந்து நிற்கும். விருதுகளுக்கோ, பாராட்டுகளுக்காக பாடுபவர் இல்லை. இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு கச்சேரியிலும் தனக்கும் அந்த பரம்பொருளுக்கு இடையே இருக்கும் தொடர்பை வலுப்படுத்தி கொண்டே இருப்பவர். நீங்கள், மயிலாப்பூர் வாசிகள், ஏற்படுத்திய சிறிய சங்கீத வட்டத்தின் இலக்கணத்தில் இல்லை என்பதால் இவருக்கு சங்கீத கலாநிதி விருது கொடுக்க மனம் வரவில்லை. இதனால் இவருக்கு என்ன நஷ்டமா, சங்கீதம் தனக்கும் கடவுளுக்கும் நடக்கும் உரையாடல் என்று நினைப்பவருக்கு. ஜனரஞ்சகத்தின் தலைவனாக திகழ்ந்தார். நீங்கள் இதுவரை இந்த அதிசயத்தை கேட்டதில்லை என்றால் இவருடைய "தாயே யசோதா" வை கேட்டுப்பாருங்கள். யூடியூபில் இருக்கிறது. நான் சொல்வது புரியும். இசை உலகில் என்றும் ஒரு மகா கலைஞன் என்றால் எனக்கு மதுரை சோமு அவர்கள்தான். ரங்கா

Friday, August 21, 2020

பெயர்

உங்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறதா அல்லது விரைவில் பிறக்கப்போகிறதா. அப்போ உங்களுடன் ஒரு சில வார்த்தைகள். குழந்தைக்கு பெயர் வைப்பது கத்தியில் நடக்கும் வித்தை. எப்படி பெயர் வைத்தாலும் யாருக்காவது அதில் ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் இருக்கும். தன் சொந்த பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள் இப்படி எல்லோரையும் ஒரே நேர் கோட்டில் நிறுத்துவது என்ன சாதாரண விஷயமா. இதை தவிர வீட்டு வேலைக்காரியில் இருந்து, இஸ்திரிகாரன் வரை எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லி மாளாது. குழந்தையின் பெற்றோர்களுக்கு இதற்குள் பாதி முடி கொட்டிவிடும். பொதுவாக இப்பொழுது பெயர் என்றவுடன் முதல் வேலையாக கூகிளில் சென்று "baby names" என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள். கூகிள் பெயர்கள் பெரிதும் வட இந்திய பெயர்களாகத்தான் இருக்கிறது. நம்மில் பலருக்கு இந்த பெயர்கள் வாயில் நுழைவதில்லை. தமிழ் தமிழ் என்று கதைக்கும் பலர் கூட தங்கள் இதுபோன்ற பெயர்களை வைத்து கஷ்டப்படுகிறார்கள். கிராமங்களில் கூட இந்த கூகிள் பெயர்கள் பிரபலமாகிவிட்டன. அப்பா தாத்தா பெயருடன் ஒப்பிட்டால் இந்த குழந்தை ஏதோ வேற்று கிரகவாசியை போல இருக்கிறது. அதோடு இல்லை. இந்த கூகிள் பெயர்கள் பொதுவாக சமஸ்க்ரிதத்தில் இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. சமஸ்க்ரித பெயர்களில் ஒன்றும் தவறில்லை, ஆனால் அதற்கு அர்த்தம் தெரிந்து குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள். வட இந்தியாவில் பெயரின் கடைசி பகுதியை வெட்டிவிடுவார்கள். கிருஷ்ணன் க்ரிஷ் என்றும், கணபதியை கண்பத் என்று. அர்த்தம் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு பெயர் வைக்கவும். நம்மிடையே பெயர்கள் ஏதாவது ஒரு கடவுளின் பெயராக வைப்பது வழக்கம். சுவாமி பெயர் வைப்பதால் வீட்டில் பகவன் நாமம் வீட்டில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டு இருக்கும் என்று நம்பிக்கை. இப்பொழுது இது முற்றிலும் வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. சமீபமாக நான் இது போன்ற சுவாமி பெயர்களை அதிகம் காண்பதில்லை. உதாரணத்திற்கு சாத்விக், லலித் போன்ற பெயர்கள் ஒரு மனிதனின் தன்மையை (character) குறிக்கின்றது. இப்படி வைத்தால் என்ன தவறு என்று கேட்பீர்கள். தவறு ஒன்றும் இல்லை, ஆனால் இந்த சமுதாய மாறுதல்களுக்கு நாமும் ஒரு காரணமாகிறோம். இன்னும் சில வருடங்களில் கடவுள் பெயர் கொண்டவர்களே இருக்கமாட்டார்கள். இதுவும் ஒரு விதத்தில் நம்முடைய ஹிந்து மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். நம்முடைய பக்தி இலக்கியங்களில் பெயர்களை தேடுங்கள், விஷ்ணு, லலிதா சஹஸ்ரநாமம், ஸ்கந்த புராணம் என்று பல இருக்கிறது. இவற்றிலும் பகவன் நாமமாக தேர்ந்தெடுங்கள். இதில் சரியானபடி கிடைக்கவில்லை என்றால் உங்கள் இஷ்ட தெய்வங்களின் கோயில் சுவாமி பெயர்களை வைக்கலாம். உதாரணத்திற்கு சிதம்பரம் அல்லது ராஜகோபாலன் என்ற பெயர்களால் குழந்தைகளுக்கு அந்த தெய்வங்களுடன் ஒரு நெருக்கமும் அடையாளமும் கிடக்கிறது. சிதம்பரம் அல்லது நடராஜன் என்று பெயர் உள்ளவர்கள் எப்பொழுதும் சிதம்பரம் கோவிலுடன் ஒரு வித பக்தியும் உடைமையும் (sense of belonging) சிறு வயது முதல் குழந்தைகளுக்கு வருகிறது. முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கும் நமக்கு பெயர்களுக்கா குறைவு. உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைக்கிறீர்கள், நான் குறுக்கே நிற்கவில்லை. இருப்பினும் என்னுடைய எண்ணங்களை பகிர்வது முக்கியம் என்று நினைக்கிறேன். ரங்கா

Wednesday, August 19, 2020

உடன்பிறப்பு

ஒரு வாரமாக உடன்பிறப்பு என்று பலபேர் இங்கு அனத்திகொண்டு இருக்கிறார்கள். உடன்பிறப்பு என்றால் எனக்கு என்ன நினைவிற்கு வருகிறது என்று சொல்லிவிடுகிறேன். சிறு வயதுமுதல் எத்தனை கூட்டங்கள், மயிலை மாங்கொல்லை, மாம்பலம் பஸ் ஸ்டாண்ட், திருச்சி ரயில்வே கிரௌண்ட்ஸ், மதுரை தமுக்கம் மைதானம் இப்படி எத்தனை இடங்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், மேடையில் வீற்றிருக்கும் ஓவ்வொரு பெயரையும் எந்தவித துண்டு சீட்டும் இல்லாமல் நிதானமாக சொல்லி, வாஜ்பாய், அத்வானி, விபிசிங், ஹெக்டே பிறகு கடைசியில் என் அன்பு உடன்பிறப்பே என்று முடிக்கும்பொழுது இருக்குமே ஆரவாரம். ஆமாம், உங்களுக்கு இருவது வயதிற்கு மேல் நூறு வயதுக்குள் இருந்தால் உங்களுக்கு இந்த உடன்பிறப்பே என்ற குரல் யாருடையது என்று தெரிந்திருக்கும். கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த குரல் ஒலிக்காத நாளில்லை. கிட்டத்தட்ட என்பதாண்டுகளாக ஒலித்த இந்த குரல், உடன்பிறப்பே என்ற வார்த்தையை தனதாக்கி கொண்டு ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்திலும் தலைவனாகவோ அல்லது பகைவனாகவோ வாழ்ந்து இருக்கிறார். இன்று தமிழகத்தில் உடன்பிறப்பே என்ற வார்த்தைக்கு அன்று இருந்த வீரியம் இல்லை, கவர்ச்சி இல்லை. இதனால் தான் கலைஞரின் சொந்தங்கள் தமிழர்களின் நெஞ்சத்தில் இடம்பிடிக்க தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Emotional Connect என்று சொல்வார்களே, அது கலைஞரின் குரலுக்கு சொந்தமானது. ஏழையோ, பணக்காரனோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ கலைஞரின் பேச்சாற்றலில் கட்டப்படாதவர்களே கிடையாது. இந்த குரலின் வசீகரம் இன்று இங்கு எவருக்கும் கிடையாது. இன்று எல்லோரும் பெரியாரை என்கிற ஈ வே ரா வின் நாத்திகத்தை பற்றி பரப்புரை செய்பவர்களுக்கு தெரிவதில்லை, கலைஞரால் மட்டுமே இன்று தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் அதிகம் இருக்கிறது. நல்ல வேளையாக இது கலைஞருடன் முடிந்துவிட்டது, ஏன் என்றால் கலைஞர் அளவிற்கு நம்மை சிந்திக்க வைக்கும் தலைவர்கள் இங்கு இல்லை. நாத்திகவாதத்தையும் நயமாக பேசி ஓரளவிற்கு நம்ப வைத்தவர் கலைஞர். கலைஞரால் உருவாக்கப்பட்ட பிம்பம்தான் பெரியார், தவிர பெரியாருக்கு என்று ஒரு தனி charisma கிடையாது. இன்று அந்த பிம்பத்தை யாராலும் காட்சிப்படுத்த முடியவில்லை. அதனால் தான் இன்று அரைவேக்காட்டு நாத்திகம் தமிழகத்தில் நொருங்கிக்கொண்டு இருக்கிறது. கலைஞரால் வைக்கப்பட்ட பெரியார் சிலைகள் இன்று வெறும் மண் பொம்மைகள்தான். அதற்கு உயிரூட்ட கலைஞர் இல்லை. கலைஞருக்கு எதிலும் ஒரு ரசிப்புத்தன்மை இருந்தது. இலக்கியத்தை இலக்கிய தரத்திற்காக படிக்கக்கூடியவர். இதனால் தான் இவரின் கொள்கை உரைகள் ரசிக்கும்படியாக இருந்தது. இன்று உடன்பிறப்புகள் பக்தி இலக்கியத்தில் விரசத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது கூட கலைஞர் மயிலை மாங்கொல்லையில் உடன்பிறப்பே என்று அழைப்பது எனக்கு கேட்கிறது. ரங்கா

Tuesday, August 18, 2020

குரு பீடம்

ஸ்வாமிநாதனுக்கும் லக்ஷ்மிகாந்தனுக்கும் ஐந்தாறு வயது வித்தியாசம். காந்தன் ஸ்வாமிநாதனின் தாயார் மஹாலக்ஷ்மியின் அக்கா பையன். காந்தன் பிறந்த சில நாட்களில் அவன் அப்பா காலமாகிவிட்டதால், ஸ்வாமிநாதன் வீட்டில் தான் பெரும்பாலும் வளர்ந்து வந்தான் காந்தன். சிறுவயது முதல் இருவரும் எதையும் சேர்ந்து செய்வதுதான் வழக்கம். ஸ்வாமிநாதனுக்கு ஒரு அண்ணா கணபதி, மூன்று தம்பிகள், ஒரு தங்கை. மற்றவர்களை விட காந்தனுக்கும் ஸ்வாமிநாதனுக்கும் தான் அவ்வளவு அன்யோன்யம். இருவருக்கும் வேதத்தின் மீது ஆர்வம் அதிகம். ஸ்வாமிநாதனுக்கு காந்தனின் பாடம் எல்லாம் கேள்வி ஞானம் தான். இருந்தாலும் ஒரு முறை கேட்டால் போதும், ஸ்வாமிநாதன் அப்படியே சொல்லிவிடுவது வழக்கம். தினமும் காந்தன் வேதம் பயிற்சி செய்யும்பொழுது ஸ்வாமிநாதன் கூடவே உட்கார்ந்துவிடுவான். ஸ்வாமிநாதனுடைய அம்மா மஹாலக்ஷ்மி அம்மாள். கோவிந்த தீக்ஷிதர், வேங்கடமஹி பரம்பரை. வேங்கடமஹிதான் கர்நாடக சங்கீதத்தின் ஆதாரமாக விளங்கும் மேளகர்த்தா ராக சக்ரங்களை முறை செய்தவர். கோவிந்த தீக்ஷிதர் தான் கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. சங்கீத வம்சம், அதனால் சுவாமிநாதனுக்கு இயற்கையிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு அதிகம். அம்மாவிடம் நிறைய கீர்த்தனங்களை பாடம் செய்து இருந்தான். இதை தவிர வீணை பயிற்சி, இங்கிலிஷ் படிப்பு என்று சுவாமிநாதனின் அறிவு தேடல் விரிந்துகொண்டே இருந்தது. ஸ்வாமிநாதனின் அப்பா சுப்பிரமணிய சாஸ்திரிகள் தான் குரு. சுப்ரமணிய சாஸ்திரிகள் காஞ்சி மடத்திற்கு நெருக்கமானவர். அடிக்கடி கும்பகோணம், கலவை என்று தரிசனம் செய்து வருவது வழக்கம். இவர்கள் விழுப்புரத்தில் இருந்ததால் இரு இடங்களுக்கும் போய்வர வசதியாக இருந்தது. சில சமயங்களில் காந்தனும் ஸ்வாமிநாதனும் சங்கராச்சார்யர் முகாம்களில் இருந்து பூஜை கைங்கர்யம் செய்வார்கள். பூஜை விதிகளில் காந்தனுக்கு நல்ல பயிற்சி. அன்றைய பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் VII. இவருக்கு காந்தனின் பக்தியும், அறிவு திறனையும் பார்த்து அவனை அடுத்த மடாதிபதியாக்க தீர்மானித்திருந்தார். ஒரு நாள் திடீர் என்று சங்கராச்சாரியாருக்கு வயிற்று வலி அதிகமாகி உடல் நிலை மிக மோசமாகி விட்டது. உடல் நிலை மேலும் மோசமடைந்து எதிர்பாராத விதமாக காலமானார். ஆதி சங்கரர் காலத்தில் இருந்து பீடாதிபதி தொடர்ச்சியாக சந்திரமௌலீஸ்வர பூஜை நடந்துகொண்டு இருக்கிறது. இதை தொடரவேண்டும். உடனே அவசரமாக மடத்து நிர்வாகிகள் காந்தனை திட்டமிட்டபடி மடாதிபதி ஆக்கினார்கள். காந்தனுக்கு அப்பொழுது பதினேழு வயசு. லட்சுமிகாந்தன் அன்றில் இருந்து மஹாதேவேந்திர சரஸ்வதியானார். காந்தனின் அம்மாவிற்கு தகவல் சொல்லி அழைத்துவரப்பட்டார். அக்காவுக்கு ஆறுதலாக மஹாலக்ஷ்மி அம்மாளும் சுவாமிநாதனும் கலவைக்கு புறப்பட்டார்கள். முதலில் காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து கலவைக்கு செல்வதாக ஏற்பாடு. இதற்குள் பொறுப்பேற்ற நாலைந்து நாட்களில் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு முந்தைய ஆச்சார்யரின் உடல் நிலை போல வந்துவிட்டது. இரண்டு நாட்களில் மிக மோசமாகி பொறுப்பேற்று ஏழு நாட்களில் சித்தியடைந்தார். அடுத்தடுத்து ஒரு வாரத்தில் காஞ்சி மடத்திற்கு பெரும் சோதனை. சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யவேண்டும். கோடானுகோடி பக்தர்களுக்கு குருபீடமாக இருக்கும் காஞ்சி மடம் நிர்கதியாக இருந்தது. மறைவதற்கு முன் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற காந்தனுக்கு, ஸ்வாமிநாதனின் ஞாபகமாகவே இருந்தது. மடத்து நிர்வாகிகளிடம், தனக்கடுத்து ஸ்வாமிநாதன் மட்டுமே இந்த பொறுப்பை ஏற்க மிக சரியானவராக இருக்கும் என்று சொல்லி இருந்தார். உடனே ஸ்வாமிநாதனை அழைத்துவர ஆட்கள் அனுப்பப்பட்டனர். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் மஹாலக்ஷ்மி அம்மாளும் ஸ்வாமிநாதனும் வந்திருந்தார்கள். இங்கிருந்து கலவை போவதாக திட்டம். குமரக்கோட்டம் அடைந்த சில நேரத்தில், காஞ்சி மடத்தில் இருந்து முனிரத்னம் முதலியார் மஹாலக்ஷ்மி அம்மாளையும் ஸ்வாமிநாதனையும் பார்த்துவிட்டார். மஹாலக்ஷ்மி அம்மாளிடம் சுவாமிநாதனை உடனே கலவைக்கு அழைத்து செல்லவேண்டும் என்றார். மஹாலக்ஷ்மி அம்மாள் எதற்கு என்று கேட்க மனம் வரவில்லை. மடத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்தால் அதை கேள்வி கேட்பது வழக்கம் இல்லை. உடனே ஸ்வாமிநாதன் முனிரத்னம் முதலியார் கொண்டுவந்திருந்த மாட்டு வண்டியில் கலவை புறப்பட்டான். போகிற வழியில்தான் முதலியார் ஸ்வாமிநாதனுக்கு விஷயத்தை சொன்னார். பதிமூன்று வயது ஸ்வாமிநாதன் காஞ்சி பீடாதிபதியாகி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆனார். ஸ்வாமிநாதனின் அப்பாவிற்கு இதற்குள் தந்தி மூலம் விஷயம் சொல்லப்பட்டது. உடனே காஞ்சிக்கு விரைந்து மஹாலக்ஷ்மி அம்மாளும் சுப்பிரமணிய சாஸ்திரிகளும் ஸ்வாமிநாதனை காஞ்சி மடாதிபதியாக தான் பார்க்க முடிந்தது. 13 February 1908 அன்று பதிமூன்று வயதில் காஞ்சி மடத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு அவர்கள் ஸ்வாமிநாதனை பார்க்கவில்லை. அக்காவிற்கு ஆறுதல் சொல்லவந்த மகாலட்சுமிக்கு தன் பிள்ளை இந்த பொறுப்பை ஏற்றது பெரும் அதிர்ச்சி. இருந்தும் லோக நன்மைக்காக சிலர் இந்த தியாகங்களை செய்யவேண்டி இருக்கிறது. இதன் பின் ஸ்வாமிநாதனுக்கு நாலைந்து வருடங்கள் காஞ்சியில் இருந்தால் பல நிர்பந்தங்கள் இருக்கும் என்பதால் முசிறிக்கு அருகே இருக்கும் மஹேந்திரமங்கலத்தில் தங்கி மேற்படிப்பை தொடர்ந்தார். இந்த சமயத்தில் பல வேத புத்தகங்கள், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம், தொல்பொருள் ஆராய்ச்சி (Archeology), சிற்பம், சங்கீதம் என்று பலவற்றில் புலமை பெற்றார். பதிமூன்று வயதில் இந்தியாவின் மிக பெரிய மடத்தின் பொறுப்பேற்று நிர்வாகம் செய்வது எளிதான காரியமாக இருக்க முடியாது. அவர் பொறுப்பேற்ற காலத்தில் Vedic Studies பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தது. பெரிதும் ஆங்கிலச் ஆட்சியாளர்களால் பல கலாசார மாறுதல்கள் வந்துகொண்டு இருந்தது. இவை அனைத்தையும் புரிந்துகொண்டு, என்பதாண்டுகளுக்கு மேல் காஞ்சி மடத்தை நிர்வாகம் செய்துகொண்டு, பல கோடி பக்தர்களுக்கு குருவாகவும் விளங்கி வந்திருக்கிறார். இவருடைய காலத்தில் பல இடங்களில் வேத பாடசாலைகள் அமைத்து, மாணவர்களை வேதம் படிக்க தயார் செய்து, பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு, பல வரலாற்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றும் ஹிந்து மதம் வலுவான நிலையில் இருக்கிறது. அவருடைய நூறாவது வயதில் 8 ஜனவரி 1994 அன்று மோக்ஷமடைந்தார். இன்றும் பரமாச்சார்யராக கோடானுகோடு பக்தர்களுக்கு அருள் பாலித்திக்கொண்டு தான் இருக்கிறார். ஜெய ஜெய சங்கர!! ஹர ஹர சங்கர!!!

Saturday, August 15, 2020

அரவணை

அரவணை நீங்கள் ஸ்ரீரங்கத்துகாரராக இருந்தால் உங்களுக்கு அரவணை பற்றி சொல்லவேண்டியது இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். நான் முற்றிலும் ஸ்ரீரங்கத்துகாரனாக இல்லாவிட்டாலும் எனக்கும் ஸ்ரீரங்கத்திற்ககும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெருமாளின் திருநாமத்தை என் பெயரில் சுமந்துகொண்டு இருக்கிறேன். இது ஒன்று போதாதா எனக்கும் ஸ்ரீரங்கத்திற்கு உள்ள உறவை சொல்ல. ரேவதி நக்ஷத்திரம் வேறு, பெருமாள் நக்ஷத்திரம். வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் எங்களை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டது. இருப்பினும் ஸ்ரீரங்கத்திற்கு போகாத வருடங்களே கிடையாது. தாத்தா பாட்டி, சித்தப்பா குடும்பங்கள் அங்கு இருப்பதால் இன்றும் நேட்டிவ் பிலேஸ் என்று யாரவது கேட்டால் ஸ்ரீரங்கம் என்று சிலசமயம் சொல்வதுண்டு. ஸ்ரீரங்கம் இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு semi urbanised டவுன், அந்த பெரிய கோபுரத்திற்கு வெளியே. பெரிய கோபுரத்திற்கு உள்ளே நுழைந்தால் வேறு உலகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏதோ ஊர் ஸ்தம்பித்து விட்டாற்போல இருக்கும். அந்த பல்லவன் எஸ்ப்ரஸில் கொள்ளிடம் பாலம் தாண்டும்பொழுது பல்ஸ் எகிறிவிடும். அந்த குதூகலத்திற்கு எல்லையே இல்லை. ட்ரெயினில் இறங்கி வீட்டில் பெட்டி மற்ற சாமான்களை வைத்தவுடன் எங்களுக்கு முதல் வேலை அரவணை வாங்க செல்வதுதான். இந்த அரவணை பெரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் இரவுக்கால நைவேத்தியம். தினமும் இரவு பத்து மணிக்கு மேல் தான் பள்ளியறை பிரசாதம் மடப்பள்ளியில் இருந்து வெளியே வரும். பொதுவாக இந்த பிரசாதம் வெளியூர்காரர்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. இந்த இரவு பூஜைக்கு மட்டுமே செய்யப்படும் பிரசாதம். வெளியூர்காரர்களின் தள்ளுமுள்ளு இல்லாமல் பெருமாளை விச்ராந்தியாக தரிசிக்கலாம். பெருமாள் தரிசனத்துடன் அரவணை போனஸ். ஆதிசேஷன் வாலால் அந்த மடப்பள்ளி பாத்திரத்தில் உருவியதால் இதற்கு அரவணை என்று பெயர் வந்ததாக ஐதீகம். பெரிய பெருமாளுக்கு தனியாக அரவணையும், தாயாருக்கு தனி அரவணையும் வரும். அந்த கூடையில் அரவணையுடன் மடப்பள்ளியில் இருந்த வெளியே வரும்பொழுது ஒரு வாசனை வருமே. இப்பகூட அந்த வாசனை எங்கேயோ மனதிற்குள் வருகிறது. அரவணை என்றவுடன் குருவாயூர் அரவணை பாயசம் என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். அதுவேறு. இந்த அரவணை ஸ்ரீரங்கம் தவிர உலகில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. அந்த பெரிய மூங்கில் தட்டில் மந்தார இலைகளின் மேல் வைத்து துணி போட்டு மூடி எடுத்து வருவார்கள். அந்த தட்டு வரும்பொழுதே நம் கவனமெல்லாம் அரவணைக்கு மாறிவிடும். பெருமாளுக்கு ஒரு தட்டு, தாயாருக்கு ஒரு தட்டு என்பதால் அதிகம் கிடைக்காது. சில நாட்களில் யாருமே கோவிலில் இருக்கமாட்டார்கள். அந்த நாட்களில் ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கினால் ஒரு தூக்கு சட்டி முழுதும் கொடுப்பார்கள். இந்த அரவணை வாங்குவதற்கு ஒரு பிரத்யேக வழி இருக்கிறது. பெருமாளை சேவை சாதித்து வரும்பொழுது வெளியே பட்டரிடம் சன்னமான குரலில் சொல்லிவிடவேண்டும் எவ்வளவு வேண்டும் என்று. அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் எடுத்துவைத்து கொடுப்பார்கள். இதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு செல்வதற்குள் கையெல்லாம் நெய்யாக இருக்கும். தாயார் அரவணைக்கும் பெருமாள் அரவணைக்கும் கொஞ்சம் வித்யாசம் இருக்கும். இந்த அரவணை கிட்டத்தட்ட சக்கரை பொங்கல் மாதிரி இருக்கும். ஆனால் சக்கரை பொங்கலை போல பயத்தம்பருப்பு கிடையாது. பாலில் அரிசியை வேகவைத்து, வெல்லம் சேர்த்து, நெய் தாராளமாக போடவேண்டும். கொஞ்சம் உப்பும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய மாஸ்டர் குக்கா இருந்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் அரவணை சுவையை கொண்டுவரமுடியாது. ஆயிரம் ஆண்டுகளாக பழக்கப்பட்ட மடப்பள்ளியின் வாசனை கலந்த புகை வாசனை. அரவணை தவிர ஸ்ரீரங்கம் கோவிலில் சாம்பார தோசை, தயிர் ஸாதம், புளியோதரை என்று பல உண்டு. தயிர் சாதத்துடன் கொடுப்பார்களே மிளகாய் ஊறுகாய், அதை பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன். பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் இன்று industrialise செய்துவிட்டார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் இருந்த பிரத்யேக சுவை இன்று இருப்பதில்லை. கோவில் பிரசாத கடைகள் ஏலம் விடப்பட்டு லாபம் ஈட்டுவதற்கு தான் இருக்கின்றன. இன்று நம் உணவு பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டது. Globalization என்ற பெயரில் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் குறைந்துகொண்டு வருகிறது. இன்றும் அரவணை அதே பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. அடுத்த முறை ஸ்ரீரங்கம் போகும்பொழுது அரவணை ட்ரை பண்ணி பாருங்கள். ரங்கா

Monday, August 10, 2020

ராஜம் ப்ரொவிஷன்ஸ்

 ராஜம் ப்ரொவிஷன்ஸ் 


உங்களுக்கு என்னுடைய முதல் பிசினஸ் அனுபவத்தை பற்றி சொல்லியே தீரவேண்டும்.  இதை சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு விருத்தாசலம் ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்லவேண்டும். ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் என்றவுடன் பெரிதாக நினைத்து விடாதீர்கள். கடையின் மொத்த அளவு நாலுக்கு மூணுதான் இருக்கும். இந்த ராஜம் என்னுடைய பாட்டிதான். என்னுடைய மாமா ஒருவருக்கு சரியானபடி வேலை கிடைக்கவில்லை.  ஊரில் சில விடலை படங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதால் பாட்டிக்கு அதிகம் கவலை. உத்யோகம் புருஷ லக்ஷணம் என்பதால் இப்படி ஒரு ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் ஆரம்பித்து இருந்தார் என் மாமா. யாரவது பையன் என்ன பண்ணுகிறான் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு தோதாக இருந்தது. 


இதையும் மீறி சிலர், கா காசு என்றாலும் கவன்மெண்ட் காசாகுமா? இந்த கடையெல்லாம் நமக்கு எதுக்கு என்று யாராவது மாமி வீட்டிற்கு வந்து வெறுப்பேற்றுவார்கள். இதை எல்லாம் மீறித்தான் இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் நடத்த வேண்டி இருந்தது.  


இந்த கடையின் மூலதனம் ஏழெட்டு பெரிய பாட்டில்கள், இதில் பப்புறமுட்டாய், இலந்தவடை, மல்லாட்டை என்று சொல்லப்படும் வேர்க்கடலை, இன்னும் சில பிஸ்கட் வகைகள் இருக்கும். அப்புறம் கொஞ்சம் சணல் கயிற்றில் மேலிருந்து நான்கைந்து ஊறுகாய் அட்டைகள், கொழா பப்படம், கோபால் பல்பொடி, மலபார், காஜா பீடி மற்றும் ஒரு ஐஸ் போட்டியில் நாலு கலர் சோடா.  இவைதான் கடையின் மொத்த ப்ரொவிஷன்ஸ். Turnover என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.


பாட்டி வீட்டின் முன் திண்ணையில் ஒரு பக்கம் மரப்பலகைகளை தடுத்து கடையாக்கி இருந்தார்கள்.  கடையின் பின் வழியே வந்தால் வீட்டு ஹாலுக்குள் வந்து விடலாம்.  இந்த கடைதான் என்னுடைய முதல் பிசினஸ் அனுபவம்.  கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போகும்பொழுது, பல முறை இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் காஷியராக இருந்திருக்கிறேன்.  கடையின் முக்கியமான நேரங்கள் பக்கத்தில் இருந்த எலிமெண்டரி ஸ்கூல் ஆரம்பத்திலும் முடிவிலும் தான்.  ஸ்கூல் போகும் பையன்கள் போகிற வழியில் இலந்தவடை வாங்கி செல்வார்கள்.  மற்றபடி மதியம் கடையின் நிரந்தர கஸ்டமர்ஸ் ஊறுகாய் பாக்கெட், பப்படம் வாங்க வருவார்கள்.  ஒரு சில 'குடிமகன்கள்' பீடி, சிகரெட்டு வாங்குவார்கள்.  அநேகமாக இவர்களுடன் ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.   கடை திறந்து இருக்கும்பொழுது எப்பவும் ஒரு ஆள் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்து மறந்துபோனால் குரங்கு வந்து வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு போய்விடும்.  மத்தபடி மாமாவின் நண்பர்கள் சிலர் வந்து சினிமா, அரசியல் என்று பேசிவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் போவார்கள்.


இந்த கடையில் எனக்கு பிடித்த விஷயம் அந்த காளி மார்க் சோடா பெட்டிதான்.  தினமும் கடை திறப்பதற்கு முன் கடைத்தெருவில் போய் ஐஸ் வாங்கிவரவேண்டும்.  தெர்மக்கோல் பாக்ஸில் அதை போட்டு, சோடாக்கள்  அடுக்கி வைக்கப்படும்.  இதில் மதியம் வெய்யில் தாக்கத்தால் அநேக நாட்கள் நானே குடித்துவிடுவேன். 


ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பிசினஸ் ஓரளவிற்கு சூடு பிடித்திருக்கும் வேலையில் தான் வந்தது அதற்கு ஒரு சோதனை.  எங்கள் கடைக்கு எதிர் சாரியில் கிட்டத்தட்ட இதே பிசினஸ் மாடலில் கிட்டு ஐயரின் கடை.  இந்த கடை எங்கள் கடையை விட முதலீடு அதிகம்.  வழக்கமான ஊறுகாய், இலந்தவடையை தவிர நெய்வேலியில் இருந்து கம்பெனி மிட்டாய்கள் இறக்குமதி செய்யப்பட்டது.  நியூட்ரின் சாக்லேட் அறிமுகப்படுத்தினார்கள்.  இதனால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.  மேலும் இந்த காம்பெடிட்டர் கடை ஸ்கூல் பையன்களை கவரும் வண்ணம் வண்ண வண்ண பப்படம், கேம்பா கோலா என்று பல புது யுக்திகளை செயல்படுத்தினார்.  அந்த கடையிலும் நான் சில நேரங்களில் கேஷில் உட்கார்ந்து இருக்கிறேன்.  ராஜம் ப்ரொவிஷனுக்கு வரும் வாடிக்கை கஸ்டமர் அந்த கடைக்கு போகும்பொழுது ஒரு குற்ற உணர்ச்சியுடன் எங்களை பார்த்துக்கொண்டே செல்வார்கள்.


கொஞ்ச நாட்களில் மாமாவிற்கு அரசாங்க வேலை கிடைத்து மெட்ராஸ் போகவேண்டியதால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் மூடப்பட்டது.  பிறகு சில வருடங்கள் கழித்து இன்னொரு மாமாவிற்கு வேலை கிடைக்காததால் கடை மீண்டும் திறக்கப்பட்டது.  அப்புறம் ரொம்ப நாட்கள் இதை தொடர முடியவில்லை.  


இன்று எவ்வளவோ கிளைண்ட்ஸ் மீட்டிங், பிசினஸ் என்று இருந்தாலும், அந்த புளிப்பு மிட்டாயும், ஊறுகாயும் பாட்டிலில் இருந்து எடுத்துக்கொடுத்து சில்லறை கல்லாவில் போடும் சந்தோஷத்திற்கு ஈடு உண்டோ.


ரங்கா 


Wednesday, August 05, 2020

கிழம்

கிழம்

ஆச்சு, இந்த புரட்டாசி வந்தா எனக்கு வயது, விபவவில் இருந்து விபவ அறுபது, சுக்ல பிரமோதூத..சார்வரி, சரி கொழப்பவில்லை. புரட்டாசி வந்தா 91.  இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருப்பது சென்னை என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையில் எங்கு என்று மட்டும் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.  இரண்டு அல்லது மூன்று மதத்திற்கு ஒருமுறை என்னை பார்சல் செய்துகொள்வார்கள் என் இரு பிள்ளைகளும்.  கடைசியாக ஏதோ கோட்டூர்புரம் என்று சில வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது.  மற்றபடி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

மறதி வேற.  ஒரு சில வருடங்களாகவே இந்த மறதி வந்து படுத்தி எடுக்கிறது.  எனக்கு எவ்வளவு பிள்ளைகள் என்று குழப்பங்கள்.  அதனால்தான் இப்போ கொஞ்சம் நினைவு இருக்கும்போது எழுதலாம் என்று  உட்கார்ந்தேன்.  எனக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண்.  பெண்ணை கலியாணம் செய்து கொடுத்து பரோடாவில் செட்டில் ஆகிவிட்டாள். அவளுக்கும் இப்போ எழுவது வயது ஆகப்போகிறது.  பிள்ளை பேரன் என்று அவள் குடும்பத்தை சமாளிப்பதிலேயே அவளுக்கு போய்விடுகிறது.  மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மெட்ராசுக்கு  வருவாள்.  வந்த அம்மா அம்மா என்று மாய்ந்து போவாள்.  என்னோட வந்துடு, பரோடாவில் அணைத்து வசதியும் இருக்கு என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்வாள்.  ஒரு மாதம் கழித்து கிளம்பும் பொழுது பொங்கல் சேர அழைத்துக்கொண்டு போகிறேன். இப்போ உன்னால குளிர் தாங்கமுடியாது என்று கிளம்புவாள். எனக்கு இங்க தான் சாஸ்வதம்.  இன்னும் எத்தனை நாளோ என்று எண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்.

மறப்பதற்கு முன் என்னுடைய பழைய கதையை சொல்லி விடுகிறேன்.  என்னுடைய பெயர் கோகிலாம்பாள்.  கோகிலா பாட்டி என்று தான் எல்லோருக்கும் தெரியும்.  பூர்விகம் திருமணஞ்சேரி.  மாயவரம் பக்கம்.  பெரிய அக்ரஹாரம். அநேகமா எங்கள் தெருவில் எல்லோரும் ஏதாவது ஒரு உறவாகத்தான் இருக்கும்.  காவிரி கரை. எங்கு பார்த்தாலும் வயல்வெளியும், தென்னைதோப்புகளாக இருக்கும்.  மூன்று கட்டு வீடு.  இப்போ யாருக்கு தெரியும் மூன்று கட்டு  வீடெல்லாம். எங்கள் வீட்டிற்கு பின்னால் தோட்டத்தின் வழியாக சென்றால் காவிரி கரையை அடைந்து விடலாம்.  சிறுவயது முதல் தினமும் காவிரியில் குளித்துவிட்டு எங்கள் ஊர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம்.  சுவாமி பெயர் கல்யாணசுந்தரேஸ்வரர், அம்பாள் பெயர் கோகிலாம்பாள். கோவிலில் ஆள் அரவம் இருக்காது. இப்போலாம் நிறைய பேர் கூட்டமாக வருகிறார்கள் என்று கேள்வி.  எங்கள் ஊர் கோவிலுக்கு சென்று வந்தால் கல்யாணம் சீக்கிரம் நடக்கும் என்று ஐதீகம்.  எனக்கும் பதினைந்து பதினாறு வயதில் விமரிசையாக கல்யாணம் செய்து வைத்தார்கள்.  என் அப்பா ஊரில் கொஞ்சம் சொத்து பத்து இருப்பவர் தான்.   வீருசாமி பிள்ளை நாதஸ்வரம், அரியக்குடி கச்சேரி, வலங்கைமான் வேட்டு என்று நான்கு நாட்கள் கல்யாணம். ஊரே ப்ரமாதப்பட்டது.

அவருக்கு பெயர் சபேசன். திருவிடைமருதூரில் இருந்து பெரிய கூட்டமே வந்து இருந்தது.  கலியாணம் முடிந்த கையோடு இரண்டு பிள்ளையும், ஒரு பெண்ணும் பெற்றாகிவிட்டது. இரண்டு பிறந்தவுடன் இறந்துவிட்டது.  பத்து வருடம் கூட முடியவில்லை, அவருக்கு வயிற்றுவலி எடுத்தது, ஒரு வாரம் அவதிப்பட்டது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு கை விரித்துவிட்டார்கள்.  ஒரு வாரத்தில் உயிர் பிரிந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நான் தனி தான். ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்து வைக்கும் எங்கள் ஊர் சாமிக்கு என்னை இப்படி பார்ப்பதில்தான் ஆசையோ என்னவோ.  ஏதோ சொத்து தகராறு, பங்காளிகள் சண்டை எல்லாம் முடிந்து எனக்கு கொஞ்சம் சொத்து கைக்கு வந்தது. இதற்குள் எங்கள் ஊரில் பலர் மெட்ராஸுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.  நானும் ஒரு சில வருடம் ஊரில் போராடிவிட்டு, பிள்ளைகள் மேற்படிப்பிற்கு மெட்ராஸ் வந்தேன்.  இந்த மெட்ராஸ்ல தன்னந்தனியா அலையாத இடம் இல்லை.  சில வருடங்களில் ஊரில் இருந்த நில குத்தகைக்காரர்களிடம் இருந்து வரும் கொஞ்ச நஞ்ச வருமானமும் நின்று விட்டது.  கடைசியில் நிலமே இல்லை என்று ஆகிவிட்டது.  இதற்குள் எங்கள் ஊரில் தெரிந்தவர்கள் யாருமே இல்லாததால் நிலங்களை முற்றிலும் இழந்துவிட்டோம். பிறகு கஷ்ட ஜீவனம்தான். காலையிலும், மாலையிலும் 4,5 வீடுகளில் சமையல் வேலை. கொஞ்சம் நன்றாக பாடுவேன்.  சனி, ஞாயிறு முழுதும் குழந்தைகளுக்கு பாட்டு கிளாஸ், கூடை பை பின்னி கொஞ்சம் வியாபாரம் என்று எப்படியோ பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிட்டேன்.

மூத்தவன் கல்யாணசுந்தரம், எங்கள் ஊர் ஸ்வாமியின் பெயர். அடுத்து பிச்சை என்கிற கிருஷ்ணமூர்த்தி.
இவர்கள்தான் என்னை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டு கொண்டு இருக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னால் கூட நான் கோவில், ப்ரவசனம், கச்சேரி என்று போய் விடுவேன்.  இப்பொழுது அதுவும் முடிவதில்லை.  எங்க, இப்போ தெருவில் கால வெச்சாலே வண்டி சத்தம்.. அப்பப்பா. எதற்காக இந்த அவசரம்.  முன்னெல்லாம் தியாகராய நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் என்று நடந்தும் பஸ்ஸிலும் போய் இருக்கிறேன்.  இப்போல்லாம் தெருவில் எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  தெருவை எப்படி கடப்பது என்று புரிவதில்லை. உலகத்தின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.  இந்த பரபரப்பு, கூட்டம், கோபம் இதெல்லாம் எனக்கு புரிவதில்லை.  ஒரு விநாடிகூட ஒரு இடத்தில நிற்கமுடிவதில்லை.  தெருவில் காலை வைத்தால், பின்னாலயே ஒரு வண்டி வரது, கூட்டம் கூடி விடுகிறது.

என் பேரன்களும், பேத்திகளும் அமெரிக்கா, கனடா என்று இருப்பதால், என் இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி அங்கு போகவேண்டி இருக்கிறது.  என்னை எங்க அழைத்துபோவது. நான்தான் இவர்களுக்கு ஒரு கால்கட்டு.  இந்த கிழத்த வெச்சுண்டு எங்கயும் நிம்மதியா போகமுடியலியே, இது போன்ற சம்பாஷணைகள் அடிக்கடி காதில் விழுவதுண்டு.

வருஷாவருஷம் இவர்கள் அமெரிக்கா போகவேண்டி இருக்கிறது.  இப்போகூட ஏதோ சீனியர் citizen ஹோம் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  எனக்கு இல்லை, அவர்களுக்கு.  அங்கு போனால் பல வேலைகள் மிச்சம், சமைக்க தேவை இல்லயாம்.  என்னை என்ன செய்வது என்று பெரிய யோசனையாய் இருக்கிறது.  நான் என்ன செய்யமுடியும். சுவாமி எப்போ கூப்படறாரோ. எனக்கென்ன தனிமை புதுசா. அறுபது வருடமாக ஒண்டி கட்டைதான்.  அவர் முகம் கூட மறந்து பல வருடமாகிவிட்டது.  ஒரு போட்டோ கூட இல்லை.

இன்னும் எவ்வளவு நாள் இந்த ஜீவனம். எனக்கு திருமணஞ்சேரியில் போய் கண்ணைமூட ஆசைதான். என்ன செய்ய. நான் இப்படியே மாடிப்படி அருகே உட்கார்ந்துகொண்டு கொண்டு வருவோரையும்  போவோரையும்  ஏதாவது கேள்வி கேட்டுண்டு இருப்பேன். எனக்கு வேற வேலை இல்லை. கண்ணை மூடினால் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது.  இதுல மறதி வேற. ஏதோ என் மனதில் இருப்பதை எழுதலாம் என்று உட்கார்ந்தேன்.  உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் பழைய கதை எல்லாம் இப்போ எதற்கு. நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில், என் கதையை படிக்க ஏது நேரம். படித்துதான் என்ன ஆகப்போகிறது.


ரங்கா


Sunday, August 02, 2020

வானப்ரஸ்தம்

வானப்ரஸ்தம்

பொதுவாக நம் ஹிந்து வழக்குப்படி வாழ்க்கையை நான்கு பாகங்களாக பிரித்து பார்க்கிறோம்.  முதலாவதாக ப்ரஹ்மசர்யம்.  நம் இளமை பருவங்களில் அநேகமான நேரங்களை கல்வி கற்பது, தன்னொழுக்கம்,  குரு பக்தி இப்படி செல்கிறது.  பெரும்பாலும் நவீன கல்வி வழக்கிலும் இதைத்தான் செய்கிறோம்.  காலத்திற்கு ஏற்ப நம் பழக்க வழக்கங்கள் மாறி இருந்தாலும் இளமையில் கல் என்பது இன்றும் பொருந்துகிறது.

ப்ரஹ்மசர்யத்தை தொடர்ந்து க்ரிஹஸ்தாச்ரமம். இந்த முறைப்படி பொருள் ஈட்டுதல், குடும்பத்தின் மேம்பாடு, குழந்தைகளின் கல்வி, சமுதாய பொறுப்புடன் வாழ்க்கை முறை இப்படி இருக்கிறது.  தர்மம், அர்த்த, காம மற்றும் மோக்ஷத்திற்கான வழியை நோக்கி செல்வது முக்கியமாகிறது.  இதை இன்றும் ஆண் பெண் என்றில்லாமல் எல்லோரும் பெரிதும் கடைபிடித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து வானப்ரஸ்தம். இந்த வானப்ரஸ்த நிலையில் நம்மை அடுத்த கட்டங்களுக்கு தயார் செய்து கொள்ளும் முக்கியமான காலமாகிறது.  இந்த நிலையில் அர்த்த, காமங்களை தொலைந்து மோக்ஷத்தை நோக்கி அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகிறது.  சுமார் ஐம்பதில் இருந்து எழுபது வயது வரை வானப்ரஸ்த வாழ்க்கை முறை சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த வானப்ரஸ்த நிலையை பற்றித்தான் சில கருத்துகளை முன் வைப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.  இந்த நவீன உலகமயமாக்குதலின்(Globalization) காரணமாக வானப்ரஸ்த நிலை பெரிதும் மாறி இருக்கிறது.   ஓய்வு பெற்ற பிறகு (Post Retirement) என் தாத்தாவை பார்த்து  இருக்கிறேன். தன்னுடைய முழு நேரத்தையும் கல்வி, ஆராய்ச்சி என்று மூழ்கி இருப்பார்.  அறுபது வயதில் இருந்து தன்னுடைய எண்பதாவது வயது வரை தினமும் 8-10 மணி நேரங்கள் ஏதேனும் புத்தகம் வாசித்து கொண்டு இருப்பர். இதை தவிர ஆன்மிக சர்ச்சை, பூஜை என்று மற்ற நேரங்களில்.  இதை தினமும் செய்வதால் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அதனால் சிறிது நேரம் கிரிக்கெட், டென்னிஸ், TV  என்று ஈடுபடுத்தி கொள்வது வழக்கம்.  என் தாத்தா மட்டும் இல்லை, நிறைய வீடுகளில் இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படித்தான் வாழ்க்கையை நெறிப்படுத்தி கொள்வார்கள்.

இன்றைய கால கட்டங்களில் இந்த வாழ்க்கை முறைதான் மாறிவிட்டது.  சமூக வலைத்தளங்களின் வருகையால் வானப்ரஸ்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது.  இன்றைய மாணவர்கள் Smart  Phone  தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெரியவர்கள் நினைக்கிறார்கள்.  மாறாக Smart Phone, computers  இல்லாமல் இன்று பள்ளி/கல்லூரி படிப்பை கடக்க முடியாது.   Smart Phone, Social Media  தாக்கத்தினால் ஒரு சில பாதிப்புகள் இருந்தாலும், இவற்றை கடந்து வெற்றிகரமாக இன்றைய மாணவர்களால் செயல்பட முடிகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு smart phone, social media தாக்கம் இளைஞர்களை அதிகமாக இருக்கிறது நிதர்சனமாக தெரிகிறது.   பல Facebook, WhatsApp  குழுக்களில் இணைத்துக்கொண்டு தீவிரமாக கருத்து பரிமாற்றங்கள் என்று இவர்களின் வாழ்க்கையில் என்றும் இல்லாத ஒரு சுதந்திரத்தை காண்கிறார்கள்.  தங்களின் ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளி, கல்லூரி, பல அலுவகங்களில் வேலை, என்று இவர்களின் நட்பு வட்டம் பெரிது.  இதை தவிர Family Groups என்று பலதரப்பட்ட குழுக்களில் இருப்பதால் இவர்களுக்கு கவசிதறல் (distractions) அதிகமாக ஏற்படுகிறது.  தினமும் ஆயிரக்கணக்கில் வரும் வீடியோக்களும், துணுக்கு செய்திகளும் share  செய்யப்படுகிறது.  Technology seems to have completely overwhelmed this age group.  ஆழ்ந்த அறிவும், Deep learning,  ஆன்மீகமும் social media குழுக்களில் photo/video பரிமாற்றத்துடன் முடிந்து விடுகிறது.  ஆன்மிகம், விஞ்ஞானம், வரலாற்று புத்தகங்களில் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை உள்வாங்கும் பொறுமை இல்லையோ என்று தோன்றுகிறது.  மேலும் பல அரசியல்/மதம் என்று சில குழுக்களால் மூளை சலவை செய்யப்பட்டு, தீவிர மத வெறியர்களாகவும் மாற்றி வருகிறது.

இந்த மாறுதல்களால் பின் வரும் சந்ததியினருக்கு தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.  தனி மனித சுதந்திரத்தினால் எனக்கு கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாமல் போனாலும், சமூக வலைத்தளங்களால் மூளை சலவை (brainwashing) அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.  வானப்ரஸ்த வாழ்க்கை முறையில் குடும்ப வாழ்க்கையில் இருந்து பற்று இல்லாத வாழ்க்கையை நோக்கி செல்வதற்கு பதிலாக, உலக பற்று அதிகமாகி விடுகிறாற்போல் இருக்கிறது.

வானப்ரஸ்தத்தை தொடர்ந்து சந்நியாச வாழ்க்கை.  இதில் பெரிதும் நம்மால் சாதிக்க முடிவதில்லை.  மருந்து மாத்திரை, மருத்துவமனை யின் உதவியுடன் தான் நம் சந்நியாச நிலை கழிக்கவேண்டி உள்ளது.  அதனால் நம் வாழ்க்கையை கடைத்தேற வானப்ரஸ்தம் ஒன்றுதான் சிறந்த நேரமாகிறது.  மாற்றம் வரும் என்று நம்புவோமாக.

ரங்கா