Saturday, August 15, 2020

அரவணை

அரவணை நீங்கள் ஸ்ரீரங்கத்துகாரராக இருந்தால் உங்களுக்கு அரவணை பற்றி சொல்லவேண்டியது இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். நான் முற்றிலும் ஸ்ரீரங்கத்துகாரனாக இல்லாவிட்டாலும் எனக்கும் ஸ்ரீரங்கத்திற்ககும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெருமாளின் திருநாமத்தை என் பெயரில் சுமந்துகொண்டு இருக்கிறேன். இது ஒன்று போதாதா எனக்கும் ஸ்ரீரங்கத்திற்கு உள்ள உறவை சொல்ல. ரேவதி நக்ஷத்திரம் வேறு, பெருமாள் நக்ஷத்திரம். வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் எங்களை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டது. இருப்பினும் ஸ்ரீரங்கத்திற்கு போகாத வருடங்களே கிடையாது. தாத்தா பாட்டி, சித்தப்பா குடும்பங்கள் அங்கு இருப்பதால் இன்றும் நேட்டிவ் பிலேஸ் என்று யாரவது கேட்டால் ஸ்ரீரங்கம் என்று சிலசமயம் சொல்வதுண்டு. ஸ்ரீரங்கம் இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு semi urbanised டவுன், அந்த பெரிய கோபுரத்திற்கு வெளியே. பெரிய கோபுரத்திற்கு உள்ளே நுழைந்தால் வேறு உலகம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏதோ ஊர் ஸ்தம்பித்து விட்டாற்போல இருக்கும். அந்த பல்லவன் எஸ்ப்ரஸில் கொள்ளிடம் பாலம் தாண்டும்பொழுது பல்ஸ் எகிறிவிடும். அந்த குதூகலத்திற்கு எல்லையே இல்லை. ட்ரெயினில் இறங்கி வீட்டில் பெட்டி மற்ற சாமான்களை வைத்தவுடன் எங்களுக்கு முதல் வேலை அரவணை வாங்க செல்வதுதான். இந்த அரவணை பெரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் இரவுக்கால நைவேத்தியம். தினமும் இரவு பத்து மணிக்கு மேல் தான் பள்ளியறை பிரசாதம் மடப்பள்ளியில் இருந்து வெளியே வரும். பொதுவாக இந்த பிரசாதம் வெளியூர்காரர்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. இந்த இரவு பூஜைக்கு மட்டுமே செய்யப்படும் பிரசாதம். வெளியூர்காரர்களின் தள்ளுமுள்ளு இல்லாமல் பெருமாளை விச்ராந்தியாக தரிசிக்கலாம். பெருமாள் தரிசனத்துடன் அரவணை போனஸ். ஆதிசேஷன் வாலால் அந்த மடப்பள்ளி பாத்திரத்தில் உருவியதால் இதற்கு அரவணை என்று பெயர் வந்ததாக ஐதீகம். பெரிய பெருமாளுக்கு தனியாக அரவணையும், தாயாருக்கு தனி அரவணையும் வரும். அந்த கூடையில் அரவணையுடன் மடப்பள்ளியில் இருந்த வெளியே வரும்பொழுது ஒரு வாசனை வருமே. இப்பகூட அந்த வாசனை எங்கேயோ மனதிற்குள் வருகிறது. அரவணை என்றவுடன் குருவாயூர் அரவணை பாயசம் என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். அதுவேறு. இந்த அரவணை ஸ்ரீரங்கம் தவிர உலகில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. அந்த பெரிய மூங்கில் தட்டில் மந்தார இலைகளின் மேல் வைத்து துணி போட்டு மூடி எடுத்து வருவார்கள். அந்த தட்டு வரும்பொழுதே நம் கவனமெல்லாம் அரவணைக்கு மாறிவிடும். பெருமாளுக்கு ஒரு தட்டு, தாயாருக்கு ஒரு தட்டு என்பதால் அதிகம் கிடைக்காது. சில நாட்களில் யாருமே கோவிலில் இருக்கமாட்டார்கள். அந்த நாட்களில் ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கினால் ஒரு தூக்கு சட்டி முழுதும் கொடுப்பார்கள். இந்த அரவணை வாங்குவதற்கு ஒரு பிரத்யேக வழி இருக்கிறது. பெருமாளை சேவை சாதித்து வரும்பொழுது வெளியே பட்டரிடம் சன்னமான குரலில் சொல்லிவிடவேண்டும் எவ்வளவு வேண்டும் என்று. அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் எடுத்துவைத்து கொடுப்பார்கள். இதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு செல்வதற்குள் கையெல்லாம் நெய்யாக இருக்கும். தாயார் அரவணைக்கும் பெருமாள் அரவணைக்கும் கொஞ்சம் வித்யாசம் இருக்கும். இந்த அரவணை கிட்டத்தட்ட சக்கரை பொங்கல் மாதிரி இருக்கும். ஆனால் சக்கரை பொங்கலை போல பயத்தம்பருப்பு கிடையாது. பாலில் அரிசியை வேகவைத்து, வெல்லம் சேர்த்து, நெய் தாராளமாக போடவேண்டும். கொஞ்சம் உப்பும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய மாஸ்டர் குக்கா இருந்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் அரவணை சுவையை கொண்டுவரமுடியாது. ஆயிரம் ஆண்டுகளாக பழக்கப்பட்ட மடப்பள்ளியின் வாசனை கலந்த புகை வாசனை. அரவணை தவிர ஸ்ரீரங்கம் கோவிலில் சாம்பார தோசை, தயிர் ஸாதம், புளியோதரை என்று பல உண்டு. தயிர் சாதத்துடன் கொடுப்பார்களே மிளகாய் ஊறுகாய், அதை பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன். பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் இன்று industrialise செய்துவிட்டார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் இருந்த பிரத்யேக சுவை இன்று இருப்பதில்லை. கோவில் பிரசாத கடைகள் ஏலம் விடப்பட்டு லாபம் ஈட்டுவதற்கு தான் இருக்கின்றன. இன்று நம் உணவு பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டது. Globalization என்ற பெயரில் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் குறைந்துகொண்டு வருகிறது. இன்றும் அரவணை அதே பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. அடுத்த முறை ஸ்ரீரங்கம் போகும்பொழுது அரவணை ட்ரை பண்ணி பாருங்கள். ரங்கா

No comments: