Sunday, September 06, 2020

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் இங்கு நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, அவரிடம் கேட்டார்களாம், உங்கள் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று, அதற்கு அவர் தன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுங்கள் என்று சொன்னாராம். நிற்க, நாடெங்கும் ஆசிரியர் தினம் விமர்சையாக கொண்டாடப்படும் வேளையில் நான் ஓரிரு வார்த்தைகளை சொல்லிக்கொள்கிறேன். நான் கொஞ்சம் இது போன்ற கொண்டாட்டங்களில் ஒதுங்கித்தான் இருப்பேன். ஆசிரியர்களின் மேல் அப்படி என்ன உனக்கு என்று பாயாதீர்கள். காரணம் இருக்கிறது. எனக்கு பள்ளி அனுபவங்கள் ஒன்றும் பிரமாதமாக இருந்ததில்லை. ஒரு சில ஆசிரியர்களை தவிர பெரும்பாலும் எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் எனக்கு கல்வி கற்கும் ஆசையே இல்லாமல் செய்தவர்கள் தான் அதிகம். இந்திய பள்ளிகளில் பொதுவாக மாணவர்களின் மதிப்பெண்களை வைத்துதான் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துவது வழக்கம். கொஞ்சம் சுமாராக இருந்தால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிடுகிறார்கள். மதிப்பெண்களை தாண்டி கற்றலின் (Learning) முக்கியத்துவத்தை அவர்கள் உணர்த்துவது கிடையாது. மாணவர்களுக்கு ஒரு பாடத்தின் (subject) மீது ஆர்வமும் ஈர்ப்பும் ஏற்படும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். ஆனால் இந்திய கல்வி முறை ஒவ்வொரு பாடத்திலும் எப்படி முழு மதிப்பெண்கள் எடுப்பது என்ற தந்திரத்தை மட்டும்தான் சொல்லிக்கொடுக்கின்றன. இந்த தந்திரம் பலருக்கு புலப்படுவதில்லை. மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு பாடத்திலும் ஒரு deeper interest ஏற்படுத்த பள்ளிகள் இடம் கொடுப்பதில்லை. முக்கால் மணி அவகாசத்தில் அவசரமாக பாடங்களை கொட்டிவிடுகிறார்கள். இது ஒரு சில Front Bench மாணவர்களை தவிர பல மாணவர்களுக்கு புரிவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் ஒவ்வொரு வருடமாக பின் தங்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு பத்து பன்னிரண்டு வகுப்புகளில் மாணவர்களை வடிகட்டி (filter) பள்ளிகள் நூறு சதவீதம் ரிசல்ட் காண்பிப்பதுதான் ஒவ்வொரு பள்ளியின் குறிக்கோளாக இருக்கிறது. இதில் வடிகட்டப்பட்ட மாணவர்கள் என்ன செய்கிறார்கள், நம்முடைய பள்ளியில் பத்து வருடங்கள் படித்த மாணவனின் எப்படி உலகை எதிர்கொள்ள போகிறான் என்ற கவலையே இல்லாமல் அடுத்த வருடத்தில் எப்படி 100% ரிசல்ட் வர முயற்சி செய்கிறார்கள். One Size Fits All என்ற முறையில் மாணவர்களின் தலையில் பளுவை வைத்துவிடுகிறார்கள். இதில் நீந்தி ஜெயிப்பது மிக கடினம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு, வெளியே டியூஷன் என்று பல வித்தைகளை செய்து வெற்றிபெற வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் எத்தனை மன உளைச்சல். ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களையும் கவனிக்க நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு வேலையாகத்தான் (Chore) பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பாடம் நடத்த தவறி விடுகிறார்கள். ஒரு ஆசிரியனின் வெற்றி, ஒவ்வொரு வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அணைத்துக்கொண்டு செல்வதில்தான் இருக்கிறது. இப்படி இல்லாமல் ஒரு சில மாணவர்களை மட்டுமே அதிகம் கவனித்து, பின் தங்கி இருக்கும் குழந்தைகளை அப்படியே விட்டு செல்வது ஒரு ஆசிரியருக்கு பெருமையாக இருக்க முடியாது. இதற்கு காரணம் முற்றிலும் ஆசிரியர்கள் என்று கூறவில்லை, நம்முடைய பாடத்திட்டமும் இப்படித்தான் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது வெறும் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் இல்லை, மற்ற துறைகளிலும் இதே கதைதான். சங்கீதம், விளையாட்டு என்று எல்லாவற்றிலும் இப்படித்தான். பாடத்திட்டங்களை front bench மாணவர்களை வைத்தே வடிவமைப்பதால் மற்றவர்களின் குரல் கேட்பதில்லை. பின் தங்கிய மாணவர்களுக்கு ஒரு வித inferiority complex நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களுக்கு அந்த வடுக்களில் இருந்து வெளியே வருவதற்கு பெரு முயற்சி எடுக்கவேண்டி உள்ளது. எனக்கு பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்களை நான் பெரிதும் unlearn செய்யவேண்டி இருந்தது. எனக்கு வாழ்க்கை மட்டுமே மிகப்பெரிய ஆசிரியனாக இருந்திருக்கிறது. நம்முடைய பாட திட்டமும், அதை சரியான பாதையில் வழிநடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தால் மட்டுமே, குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் ஒரு deeper interest ஏற்படும். ரங்கா