Tuesday, August 18, 2020

குரு பீடம்

ஸ்வாமிநாதனுக்கும் லக்ஷ்மிகாந்தனுக்கும் ஐந்தாறு வயது வித்தியாசம். காந்தன் ஸ்வாமிநாதனின் தாயார் மஹாலக்ஷ்மியின் அக்கா பையன். காந்தன் பிறந்த சில நாட்களில் அவன் அப்பா காலமாகிவிட்டதால், ஸ்வாமிநாதன் வீட்டில் தான் பெரும்பாலும் வளர்ந்து வந்தான் காந்தன். சிறுவயது முதல் இருவரும் எதையும் சேர்ந்து செய்வதுதான் வழக்கம். ஸ்வாமிநாதனுக்கு ஒரு அண்ணா கணபதி, மூன்று தம்பிகள், ஒரு தங்கை. மற்றவர்களை விட காந்தனுக்கும் ஸ்வாமிநாதனுக்கும் தான் அவ்வளவு அன்யோன்யம். இருவருக்கும் வேதத்தின் மீது ஆர்வம் அதிகம். ஸ்வாமிநாதனுக்கு காந்தனின் பாடம் எல்லாம் கேள்வி ஞானம் தான். இருந்தாலும் ஒரு முறை கேட்டால் போதும், ஸ்வாமிநாதன் அப்படியே சொல்லிவிடுவது வழக்கம். தினமும் காந்தன் வேதம் பயிற்சி செய்யும்பொழுது ஸ்வாமிநாதன் கூடவே உட்கார்ந்துவிடுவான். ஸ்வாமிநாதனுடைய அம்மா மஹாலக்ஷ்மி அம்மாள். கோவிந்த தீக்ஷிதர், வேங்கடமஹி பரம்பரை. வேங்கடமஹிதான் கர்நாடக சங்கீதத்தின் ஆதாரமாக விளங்கும் மேளகர்த்தா ராக சக்ரங்களை முறை செய்தவர். கோவிந்த தீக்ஷிதர் தான் கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. சங்கீத வம்சம், அதனால் சுவாமிநாதனுக்கு இயற்கையிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு அதிகம். அம்மாவிடம் நிறைய கீர்த்தனங்களை பாடம் செய்து இருந்தான். இதை தவிர வீணை பயிற்சி, இங்கிலிஷ் படிப்பு என்று சுவாமிநாதனின் அறிவு தேடல் விரிந்துகொண்டே இருந்தது. ஸ்வாமிநாதனின் அப்பா சுப்பிரமணிய சாஸ்திரிகள் தான் குரு. சுப்ரமணிய சாஸ்திரிகள் காஞ்சி மடத்திற்கு நெருக்கமானவர். அடிக்கடி கும்பகோணம், கலவை என்று தரிசனம் செய்து வருவது வழக்கம். இவர்கள் விழுப்புரத்தில் இருந்ததால் இரு இடங்களுக்கும் போய்வர வசதியாக இருந்தது. சில சமயங்களில் காந்தனும் ஸ்வாமிநாதனும் சங்கராச்சார்யர் முகாம்களில் இருந்து பூஜை கைங்கர்யம் செய்வார்கள். பூஜை விதிகளில் காந்தனுக்கு நல்ல பயிற்சி. அன்றைய பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் VII. இவருக்கு காந்தனின் பக்தியும், அறிவு திறனையும் பார்த்து அவனை அடுத்த மடாதிபதியாக்க தீர்மானித்திருந்தார். ஒரு நாள் திடீர் என்று சங்கராச்சாரியாருக்கு வயிற்று வலி அதிகமாகி உடல் நிலை மிக மோசமாகி விட்டது. உடல் நிலை மேலும் மோசமடைந்து எதிர்பாராத விதமாக காலமானார். ஆதி சங்கரர் காலத்தில் இருந்து பீடாதிபதி தொடர்ச்சியாக சந்திரமௌலீஸ்வர பூஜை நடந்துகொண்டு இருக்கிறது. இதை தொடரவேண்டும். உடனே அவசரமாக மடத்து நிர்வாகிகள் காந்தனை திட்டமிட்டபடி மடாதிபதி ஆக்கினார்கள். காந்தனுக்கு அப்பொழுது பதினேழு வயசு. லட்சுமிகாந்தன் அன்றில் இருந்து மஹாதேவேந்திர சரஸ்வதியானார். காந்தனின் அம்மாவிற்கு தகவல் சொல்லி அழைத்துவரப்பட்டார். அக்காவுக்கு ஆறுதலாக மஹாலக்ஷ்மி அம்மாளும் சுவாமிநாதனும் கலவைக்கு புறப்பட்டார்கள். முதலில் காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து கலவைக்கு செல்வதாக ஏற்பாடு. இதற்குள் பொறுப்பேற்ற நாலைந்து நாட்களில் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு முந்தைய ஆச்சார்யரின் உடல் நிலை போல வந்துவிட்டது. இரண்டு நாட்களில் மிக மோசமாகி பொறுப்பேற்று ஏழு நாட்களில் சித்தியடைந்தார். அடுத்தடுத்து ஒரு வாரத்தில் காஞ்சி மடத்திற்கு பெரும் சோதனை. சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யவேண்டும். கோடானுகோடி பக்தர்களுக்கு குருபீடமாக இருக்கும் காஞ்சி மடம் நிர்கதியாக இருந்தது. மறைவதற்கு முன் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற காந்தனுக்கு, ஸ்வாமிநாதனின் ஞாபகமாகவே இருந்தது. மடத்து நிர்வாகிகளிடம், தனக்கடுத்து ஸ்வாமிநாதன் மட்டுமே இந்த பொறுப்பை ஏற்க மிக சரியானவராக இருக்கும் என்று சொல்லி இருந்தார். உடனே ஸ்வாமிநாதனை அழைத்துவர ஆட்கள் அனுப்பப்பட்டனர். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் மஹாலக்ஷ்மி அம்மாளும் ஸ்வாமிநாதனும் வந்திருந்தார்கள். இங்கிருந்து கலவை போவதாக திட்டம். குமரக்கோட்டம் அடைந்த சில நேரத்தில், காஞ்சி மடத்தில் இருந்து முனிரத்னம் முதலியார் மஹாலக்ஷ்மி அம்மாளையும் ஸ்வாமிநாதனையும் பார்த்துவிட்டார். மஹாலக்ஷ்மி அம்மாளிடம் சுவாமிநாதனை உடனே கலவைக்கு அழைத்து செல்லவேண்டும் என்றார். மஹாலக்ஷ்மி அம்மாள் எதற்கு என்று கேட்க மனம் வரவில்லை. மடத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்தால் அதை கேள்வி கேட்பது வழக்கம் இல்லை. உடனே ஸ்வாமிநாதன் முனிரத்னம் முதலியார் கொண்டுவந்திருந்த மாட்டு வண்டியில் கலவை புறப்பட்டான். போகிற வழியில்தான் முதலியார் ஸ்வாமிநாதனுக்கு விஷயத்தை சொன்னார். பதிமூன்று வயது ஸ்வாமிநாதன் காஞ்சி பீடாதிபதியாகி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆனார். ஸ்வாமிநாதனின் அப்பாவிற்கு இதற்குள் தந்தி மூலம் விஷயம் சொல்லப்பட்டது. உடனே காஞ்சிக்கு விரைந்து மஹாலக்ஷ்மி அம்மாளும் சுப்பிரமணிய சாஸ்திரிகளும் ஸ்வாமிநாதனை காஞ்சி மடாதிபதியாக தான் பார்க்க முடிந்தது. 13 February 1908 அன்று பதிமூன்று வயதில் காஞ்சி மடத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு அவர்கள் ஸ்வாமிநாதனை பார்க்கவில்லை. அக்காவிற்கு ஆறுதல் சொல்லவந்த மகாலட்சுமிக்கு தன் பிள்ளை இந்த பொறுப்பை ஏற்றது பெரும் அதிர்ச்சி. இருந்தும் லோக நன்மைக்காக சிலர் இந்த தியாகங்களை செய்யவேண்டி இருக்கிறது. இதன் பின் ஸ்வாமிநாதனுக்கு நாலைந்து வருடங்கள் காஞ்சியில் இருந்தால் பல நிர்பந்தங்கள் இருக்கும் என்பதால் முசிறிக்கு அருகே இருக்கும் மஹேந்திரமங்கலத்தில் தங்கி மேற்படிப்பை தொடர்ந்தார். இந்த சமயத்தில் பல வேத புத்தகங்கள், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம், தொல்பொருள் ஆராய்ச்சி (Archeology), சிற்பம், சங்கீதம் என்று பலவற்றில் புலமை பெற்றார். பதிமூன்று வயதில் இந்தியாவின் மிக பெரிய மடத்தின் பொறுப்பேற்று நிர்வாகம் செய்வது எளிதான காரியமாக இருக்க முடியாது. அவர் பொறுப்பேற்ற காலத்தில் Vedic Studies பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தது. பெரிதும் ஆங்கிலச் ஆட்சியாளர்களால் பல கலாசார மாறுதல்கள் வந்துகொண்டு இருந்தது. இவை அனைத்தையும் புரிந்துகொண்டு, என்பதாண்டுகளுக்கு மேல் காஞ்சி மடத்தை நிர்வாகம் செய்துகொண்டு, பல கோடி பக்தர்களுக்கு குருவாகவும் விளங்கி வந்திருக்கிறார். இவருடைய காலத்தில் பல இடங்களில் வேத பாடசாலைகள் அமைத்து, மாணவர்களை வேதம் படிக்க தயார் செய்து, பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு, பல வரலாற்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றும் ஹிந்து மதம் வலுவான நிலையில் இருக்கிறது. அவருடைய நூறாவது வயதில் 8 ஜனவரி 1994 அன்று மோக்ஷமடைந்தார். இன்றும் பரமாச்சார்யராக கோடானுகோடு பக்தர்களுக்கு அருள் பாலித்திக்கொண்டு தான் இருக்கிறார். ஜெய ஜெய சங்கர!! ஹர ஹர சங்கர!!!

No comments: